மருத்துவ தொழில் மூலம் சமூக சேவை...
ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருத்துவம் படித்தேன். தற்போது ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இலவசமாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த மருத்துவர் நந்தினி முருகன், மருத்துவ தொழில் மூலம் சமூகசேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். ஏழைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதோடு மரக்கன்றுகளை நடுவது முதல் மாணவர்களின் படிப்புக்கு உதவுவது வரை பல்வேறு பணிகளையும் மேற்கொள்கிறார். அவருடன் நடந்த உரையாடல் இதோ...
உங்களைப் பற்றிய அறிமுகம்...
நான் ஹோமியோபதி மருத்துவர். எனது அம்மா கனகவள்ளி, அப்பா முருகன்.
ராசிபுரம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2020-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தேன். கடந்த ஆண்டு முதல் பொன்னமராவதியில் மருத்துவமனை நடத்தி வருகிறேன்.
சமூக சேவையில் ஆர்வம் வந்தது எப்படி?
எனக்கு சிறுவயதில் இருந்தே மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது பிடிக்கும். எனது வகுப்பு மாணவர்கள், என்னிடம் நோட்டு, பென்சில் கேட்பார்கள். அவ்வாறு கேட்கும்போது என்னிடம் இருக்கும் பொருட்களை கொடுத்து விடுவேன். நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது தேவேந்திரன் என்ற ஆசிரியர், வறுமையால் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவரால் முடிந்த உதவிகள் செய்வார். நோட்டு, புத்தகம், சீருடை மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகள் வழங்குவார். அதைப் பார்த்துதான் நானும் பெரிய ஆளாகி, இதுபோல் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் ஆசைப்பட்டேன். இதெல்லாம் சின்ன விஷயம் என்று சிலர் யோசிக்கக்கூடும். ஆனால், இல்லாதவர்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறிய உதவி கூட, அவர்களுக்குப் பெரிதாகத் தெரியும்.
இப்போது எந்தெந்த வகைகளில் சமூக சேவைகளைச் செய்து வருகிறீர்கள்?
ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருத்துவம் படித்தேன். தற்போது ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இலவசமாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறேன்.
எங்கள் குழுவுடன் இணைந்து சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி வருகிறோம்.
மரங்கள் நடவு செய்தல், விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், ஆதரவற்றோர்களை மீட்டெடுத்து காப்பகத்திற்கு அழைத்துச் செல்லுதல், காப்பகங்களுக்குச் சென்று உணவு வழங்குதல் போன்றவற்றைச் செய்து கொண்டிருக்கிறோம். கொரோனா பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினோம்.
அந்தந்த துறைகளில் சாதனை படைத்த, திறமையான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்குகிறோம்.
மக்களுக்குத் தேவையான அனைத்து களப்பணி
களையும், மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் செய்து வருகிறோம். என்னுடைய நோக்கம் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்பதுதான். அதற்கேற்ப யாரையும் பசியோடு இருக்க விடாமல், என்னால் இயன்றதை செய்து வருகிறேன். நாங்கள் இருக்கும் வரை, இல்லாதோர், இயலாதோர் என்று யாரும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் குறிக்கோள்.
உதவிகள் செய்வதற்கான நிதியை எப்படிப் பெறுகிறீர்கள்?
உதவும் இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் வெவ்வேறு ஊர்களில் நடத்தி உள்ளோம்.
கொரோனா பேரிடர் காலத்தில் காலை, மதியம் என இரண்டு வேளை தினமும் 50 நபர்களுக்கு உணவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகள் என 200-க்கும் மேற்பட்டோர்க்கு நிவாரண பொருட்களும் வழங்கியுள்ளோம். தற்போது வாரம் ஒரு முறை 50 நபர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி வருகிறோம்.
மேலும், ஏழை மாணவ-மாணவிகளுக்குக் கல்விக்குப் பண உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஊர்களில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். பத்தாயிரத்திற்கும் அதிகமாக பனை விதைகள் நடவு செய்து பாதுகாத்து வருகிறோம்.
எங்கள் குழு சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சென்னை, சேலம், நாமக்கல், திருப்பூர் என 8 மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தங்களால் முடிந்த தொகையை ரூபாய் 50 முதல் ரூபாய் 1000 வரை மாதந்தோறும் கொடுப்பார்கள். அதனை ஒன்று திரட்டி உதவிகள் செய்து கொண்டிருக்கிறோம்.
நீங்கள் நட்டு வைக்கும் மரக்கன்றுகளை எந்த வகையில் பராமரிக்கிறீர்கள்?
பொன்னமராவதி, பகவான்டிப்பட்டி, கட்டையாண்டிப்பட்டி, தொட்டியம்பட்டி, சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள சிறு கிராமங்களில், அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ‘கொரோனா வாரியர்ஸ் 2021 விருது’, ‘காமராஜரின் தன்னலம் கருதா விருது -2021’, உத்ரா அறக்கட்டளை சார்பாக ‘சிறந்த மக்கள் சேவகர் விருது’, நந்தவனம் அறக்கட்டளை சார்பாக ‘சாதனைப் பெண்மணி விருது 2022’ போன்ற விருதுகள் பெற்றுள்ளேன்.
உங்களின் எதிர்கால திட்டம் என்ன?
இல்லாதவர்களின் பசியைத் தீர்ப்பது. அறக்கட்டளையின் பெயரில் காப்பகம் கட்டுவது, சொந்தங்களால் கைவிடப்பட்டோர்க்கு சொந்தமாக இருந்து இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.
மருத்துவத்துறையில் ஹோமியோபதி சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
Related Tags :
Next Story