சர்வதேச தேயிலை தினம்


சர்வதேச தேயிலை தினம்
x
தினத்தந்தி 13 Dec 2021 11:00 AM IST (Updated: 11 Dec 2021 2:14 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை உற்பத்தியாளர்களின் உழைப்பை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 15-ந் தேதி ‘சர்வதேச தேயிலை தினம்’ கொண்டாடப்படுகிறது.

காலையில் கண்விழிக்கும்போதே, படுக்கைக்கு அருகில் சூடான தேநீர் கோப்பையை தேடுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். நறுமணமிக்க தேநீர், அந்த நாளை புத்துணர்வோடு தொடங்குவதற்கு உதவும். வெயில், மழை, குளிர் என எந்த கால நிலைக்கும் ஏற்ற பானம் தேநீர். மெல்லிய மழைச் சாரலின்போது, ஜன்னல் ஓரம் அமர்ந்தபடியே தேநீரை ருசிப்பது பலருக்கும் பிடிக்கும்.

தேயிலை வாரியம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் உற்பத்தியாகும் 80 சதவீத தேயிலை, இந்திய மக்களின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில், தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்தப்படுவது தேநீர். இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, தற்போது உலக அளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், சமூகம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல், அனைவராலும் விரும்பப்படும் சமத்துவ பானமாக தேநீர் விளங்குகிறது.

தேயிலை உற்பத்தியாளர்களின் உழைப்பை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 15-ந் தேதி ‘சர்வதேச தேயிலை தினம்’ கொண்டாடப்படுகிறது. உடல் எடைக் குறைப்பில் பெரும் பங்கு வகிக்கும் தேயிலையைக் கொண்டு, உலக அளவில் 1000-க்கும் மேற்பட்ட தேநீர் வகைகள் பயன்பாட்டில் உள்ளன. 

தேயிலையில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டவை என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புத்துணர்வு தரும் பானமாக மட்டுமில்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையின் அவசியத் தேவைகளில் ஒன்றாகவும் தேநீர் திகழ்கிறது.

Next Story