ஏட்டுக் கல்வியோடு, வாழ்க்கை கல்வியும் அவசியம்


ஏட்டுக் கல்வியோடு, வாழ்க்கை கல்வியும் அவசியம்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:00 AM IST (Updated: 9 Jan 2022 11:06 AM IST)
t-max-icont-min-icon

எந்த விஷயத்தைக் கற்றாலும், அதை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி கற்க வேண்டும்.

வாழ்க்கை எல்லா நாளும் தெளிந்த நீரோடை போல செல்வது இல்லை. தடைகளும், பிரச்சினைகளும் திடீரென நமது பாதையில் குறுக்கிடும். அவற்றை சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும் அவசியமானது.

படிப்பறிவோடு சுற்றுச்சூழல், சமூகம், சான்றோர்களின் வாழ்க்கைப் பயணங்கள், மூத்தவர்களின் அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த விஷயத்தைக் கற்றாலும், அதை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி கற்க வேண்டும்.

வீட்டு மளிகை கணக்கை சரியாக கணக்கிடத் தெரியாத ஒருவர், கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றாலும் அதன் மூலம் பயனில்லை. பள்ளி, கல்லூரி பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் பல மாணவர்கள், வங்கி மற்றும் அஞ்சலக படிவங்கள் நிரப்பத் தெரியாமல் திணறுவதை இன்றும் கூட காணலாம்.

எனவே, மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டதாக மட்டும் கல்வி இருக்கக்கூடாது. ஒருவருக்கு அறிவையும், தைரியத்தையும், நல்ல பண்புகளையும், எண்ணங்களையும், மதிப்பீடுகளையும் வழங்கும் வகையில் வாழ்க்கைக் கல்வியாக இருக்க வேண்டும்.
1 More update

Next Story