இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 7 March 2022 5:30 AM GMT (Updated: 5 March 2022 10:22 AM GMT)

டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர். உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பல மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து தரப்பினருக்கும் மனநலம் தொடர் பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

1. எனக்கு 63 வயது, எனது கணவருக்கு 67 வயது. எங்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகளுக்கு 40 வயது. அவளுக்கு இளம் வயதில் மகனும், மகளும் உள்ளனர். ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார்.

எங்கள் இரண்டாவது மகள் திருமணமாகி, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். மூன்றாவது மகளுக்கு 32 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவளும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். 

தனது மூத்த சகோதரியின் கணவரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். பல வருடங்களாக அவர் இவளை மூளைச்சலவை செய்து வருகிறார். இதன் காரணமாக குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

பல வருடங்களாக உங்கள் மூன்றாவது மகளை, முதல் மகளின் கணவர் மூளைச்சலவை செய்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதை ஆரம்ப நிலையிலேயே நீங்கள் தடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் உங்கள் கடிதத்தில் இருந்து, உங்கள் மூன்றாவது மகளுக்கும் முதல் மகளின் கணவருக்குமான உறவு, அவளின் டீன் ஏஜ் வயதில் இருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 

அவ்வாறு இருக்கும்போது, அது உடல் சார்ந்த தொடர்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அத்தகைய தொடர்பு இருந்தால், இத்தனை வருடங்களில் அவர்களின் உறவு மேலும் வலுப்பெற்று இருக்கும். 

இதில் இருந்து உங்கள் மகளை வெளிக்கொண்டு வருவதற்கு மனநல மருத்துவரின் உதவி நிச்சயம் தேவைப்படும். மேலும் உங்கள் முதல் மகளுக்கும், அவரது கணவருக்குமான உறவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அவர்களை தம்பதிகளாக மன நல ஆலோசனை பெற்றுகொள்ளச் சொல்லுங்கள். இதன் மூலம் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய முடியும்.



2. நாளிதழ்களில் பாலியல் வன்முறை, படுகொலை போன்ற செய்திகளைப் படித்தால், ஏதோ எனக்கே நடந்தது போல டென்ஷனாகி ‘சிலர் ஏன் இப்படி இருக்கிறார்கள்’ என்று கோபம் அதிகமாகிறது. அக்கம் பக்கத்தினர் தவறு செய்யும்போதும், டென்ஷனாகி கோபமாகக் கண்டிப்பதன் மூலம் விரோதம் வளர்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

நாகரிக சமூகத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய கொடூர சம்பவங்கள் சகித்துக்கொள்ள முடியாதது தான். இருந்தாலும் இவற்றை உணர்ச்சிப் பூர்வமாக கையாள்வது சரியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டால், இவற்றைத் தடுப்பதற்கு உங்களால் முடிந்த நேர்மையான பங்களிப்பாக என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள். 

உதாரணத்துக்கு, உங்கள் மகனுக்கு பெண்களை மதிக்கவும், அவர்களை நல்ல முறையில் நடத்தவும் கற்றுக்கொடுங்கள். சமூகத்தில் நிகழ வேண்டும் என நாம் நினைக்கும் ஒவ்வொரு மாற்றமும், குடும்பத்தில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி: 
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’, 
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. 
மின்னஞ்சல்: devathai@dt.co.in

Next Story