இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 11 April 2022 5:30 AM GMT (Updated: 2022-04-09T15:05:42+05:30)

இப்படிக்கு தேவதை

1. நான் கல்லூரியில் படிக்கிறேன். சற்று கருப்பாக இருப்பேன். எனது நிறம் குறித்து எனக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு. சிலர் எனக்கு முன்னால் என் நிறம் குறித்து கேலி பேசுகின்றனர். அந்த நேரங்களில் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகிறேன். என் நிறத்தை மாற்றுவதற்காக பலவிதமான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறேன். நல்ல நிறமுள்ள பெண்களைப் பார்க்கும்போது, எனது நிறத்தை நினைத்து கவலை கொள்கிறேன். அவர்களுடன் சாதாரணமாக என்னால் பழக முடியவில்லை. என் மனநிலையை மாற்றிக்கொள்வதற்கு வழி கூறுங்கள்.

உடலின் மற்ற உறுப்புகளைப் போலத்தான் சருமமும், அதன் நிறமும். அதை உங்களுக்கான அடையாளமாகக் கருதாதீர்கள். அழகு, நிறம் போன்றவற்றால் பெறப்படும் ஈர்ப்பு நிலையானது அல்ல. ஒருவரின் ஆளுமை, உயரம், எடை, நிறம் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுவது இல்லை; அவரது அணுகுமுறை, ஒழுக்கம், குறிக்கோள், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.

நிறத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். உங்களை உடல் அளவிலும், மனதளவிலும் வலிமையாக்கிக் கொள்ளுங்கள். படிப்பில் முழுமனதோடு ஈடுபடுங்கள். நிறத்தை மையப்படுத்தி உங்களை கேலி செய்பவர்களுக்கு, உங்கள் வெற்றியின் மூலம் நீங்கள் யாரென்று நிரூபித்துக் காட்டுங்கள்.

நிறத்தை மாற்றுவதற்கான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். உங்களுக்குப் பொருத்தமான உடைகளை அணியுங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். தன்னை நேசிப்பவரால் மட்டுமே, தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும். மற்றவர்களை புன்னகையோடு அணுகுங்கள். உங்கள் நடத்தையின் மூலம் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.2. எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. எனது பெற்றோர் என் சிறு வயதில் இருந்தே பொறுப்பற்று இருந்தனர். நான், அவர்களைப் போல இருக்கக்கூடாது என்ற உறுதியோடு படித்து நல்ல வேலையில் சேர்ந்தேன். கல்லூரித் தோழரான எனது கணவரை காதலித்து திருமணம் செய்தேன். ஆரம்பத்தில் எங்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், நாளடைவில் எங்களுடன் பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு தேவையானவற்றை நாங்கள் செய்தாலும், அவர்களின் பொறுப்பற்றத் தன்மையால் தொடர்ந்து அவசியமற்ற செலவுகள் செய்கின்றனர். அதற்கு தேவையான பணத்தைக் கேட்டு நச்சரிக்கின்றனர். என் கணவர் வீட்டில் இருக்கும்போது அவருடன் நன்றாக பழகும் அவர்கள், அவர் வெளியில் சென்றவுடன் அவரைப் பற்றி அவதூறு பேசுகின்றனர். இவற்றையெல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை, அவர்களை கண்டிக்கவும் முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

முதுமைக் காலத்தில் பெற்றோரை கவனிப்பதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. உங்கள் பெற்றோருக்குத் தேவையானவற்றை நீங்கள் செய்வது பாராட்ட வேண்டிய விஷயம். அதே சமயம் பொறுப்பற்றத் தன்மையோடு இருக்கும் உங்கள் பெற்றோரைத் திருத்தி, பொறுப்புள்ளவர்கள் ஆக்குவது கடினம். எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நல்லது. அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். அவர்களுக்கான எல்லைகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு உண்மையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். அவர்களது ஆடம்பரச் செலவுகளுக்குப் பண உதவி செய்வதை நிறுத்துங்கள். உங்கள் கணவரைப் பற்றி அவதூறு பேசும்போது நிதானமாகவும், உறுதியாகவும் அதற்கு எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி: 
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’, 
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. 
மின்னஞ்சல்: devathai@dt.co.in

Next Story