இப்படிக்கு தேவதை
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்றாவது ஒரு நாள் அவை என்னை விட்டுப் போய்விடும் என்ற பயம் இருக்கிறது. அதனால் வளர்க்க முடியவில்லை. எனது பயத்தை எப்படி போக்குவது? வழிகாட்டவும்.
உங்களுக்கு இழப்பு குறித்து அதிக அளவு பயம் இருப்பது புரிகிறது. உங்கள் குடும்பத்தில் அல்லது நெருங்கிய உறவுகளில் யாரையாவது நீங்கள் இழந்திருக்கலாம் அல்லது அவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அந்த இழப்பை தாங்கிக்கொள்வதற்கு நீங்கள் மிகுந்த சிரமப்பட்டிருக்கலாம். அவ்வாறு அனுபவித்த வலியின் காரணமாக, மற்றொரு இழப்பை சந்திக்க நீங்கள் தயாராக இல்லை.
எந்த உறவிலும் இழப்பு என்பது இயல்பானது. இந்த பயத்தை வெல்வதற்கான ஒரே வழி, நம் வாழ்வில் குறிப்பிடத்தக்கவற்றை இழக்க ஏற்றுக்கொள்வதும், தயார் செய்வதும்தான்.
எனவே, இழப்பு பற்றிய நினைவுகளை ஒதுக்கி வையுங்கள். உங்களுக்கு பிடித்த செல்லப்பிராணியை வளர்க்க ஆரம்பியுங்கள். அதன் மீது அன்பை பொழியுங்கள். அதனுடன் இனிமையான தருணங்களை அனுபவியுங்கள். பிற்காலத்தில் அது உங்களை விட்டுப் பிரிந்துவிடலாம் என்ற எண்ணத்தை நீக்கிவிடுங்கள். ஒருவேளை அவ்வாறு நடந்தால், செல்லப்பிராணியுடன் நீங்கள் மகிழ்ந்து இருந்த தருணத்தின் இனிமையான நினைவுகள், உங்கள் காயங்களை ஆற்றும். செல்லப்பிராணிகள் வளர்ப்பது மூலம் அவற்றுக்கும், உங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.
2. இரவில் வாசல்கதவு பூட்டிய பின்பு, வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிவிட்டார்களா என்று பார்த்த பின்பே, எனக்கு தூக்கம் வருகிறது. யாரேனும் ஒருவர் விழித்திருந்தாலும், அவர்கள் தூங்கும் வரை நானும் தூங்காமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன். இதன் காரணமாக குடும்பத்தினருடன் மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
இது உங்கள் அதிகப்படியான பாதுகாப்பு உணர்வாக இருக்கலாம் அல்லது நீங்கள் அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நபராக இருக்கலாம். நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபராக இருந்து, அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பவராக இருக்கலாம். உங்களைப் போலவே, மற்றவரும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு அதிகம் இருப்பதால், பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கலாம்.
வீட்டில் உள்ள அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஒரு கட்டத்திற்கு மேல் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் முற்றிலும் சோர்வடைவீர்கள். மற்றவர்களைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காமல், சுய அன்பை பழகுங்கள். வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்களை அனுபவியுங்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’,
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.
Related Tags :
Next Story