மனதை லேசாக்கும் நார்ச்சத்து உணவுகள்


மனதை லேசாக்கும் நார்ச்சத்து உணவுகள்
x
தினத்தந்தி 1 Nov 2021 5:30 AM GMT (Updated: 30 Oct 2021 12:03 PM GMT)

நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் பெறப்படுகிறது. இது முழுமையாக செரிமானம் ஆவது இல்லை. மாறாக, செரிமானத்தை துரிதப்படுத்தி உடலின் கழிவுகள் எளிதாக வெளியேற உதவுகிறது.

ற்போதைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் பல்வேறு காரணங்களால் மன அமைதி சீர்குலைந்து மன அழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிதான தீர்வாக இருப்பவை நார்ச்சத்து உள்ள உணவுகள். இவற்றை தினசரி உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கும். 

எளிதாக செரிக்கக்கூடிய, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு எல்லா வகையான சத்துக்களும் அவசியம். உள் உறுப்புகள் சீராக செயல்பட வேண்டுமானால், அதற்கு தேவையான சக்தியை உணவு மூலமாக பெற வேண்டும். அந்த வகையில் நார்ச்சத்து உள் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது; மலச்சிக்கலை அகற்றுகிறது. 

நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் பெறப்படுகிறது. இது முழுமையாக செரிமானம் ஆவது இல்லை. மாறாக, செரிமானத்தை துரிதப்படுத்தி உடலின் கழிவுகள் எளிதாக வெளியேற உதவுகிறது.

பெண்களுக்கு சராசரியாக ஒரு நாளுக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவைப்படும். இது கரையும் தன்மை கொண்டது மற்றும் கரையாத தன்மை கொண்டது என இரண்டு வகைப்படும். ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு ஆகிய உணவு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.

கரையாத நார்ச்சத்து செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், லிக்னின் ஆகியவை அடங்கிய உணவுகளில் உள்ளது. இவை பழங்கள், காய்கறிகள் தானியங்கள், ஆப்பிள், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிபிளவர், கேரட் ஆகியவற்றில் உள்ளது. இது உணவை நல்ல முறையில் ஜீரணிக்க உதவுவதுடன், மலச்சிக்கலையும் தடுக்கிறது.

கரையாத தன்மை கொண்ட நார்ச்சத்து வயிறு நிரம்பிய திருப்தியை உண்டாக்குகிறது. உணவை 4 முதல் 6 மணி நேரம் வரை வயிற்றில் இருக்கச் செய்வதால், பசியை தூண்டும் இன்சுலின் சுரப்பியை கட்டுப்படுத்தி, பசி உணர்வைத் தடுக்கிறது. இதன் மூலம் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க முடியும்; உடல் எடையைச் சீராக பராமரிக்க முடியும்.

கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. உப்பு, கொழுப்பு ஆகியவற்றை உறிஞ்சி, மலத்துடன் வெளியேற்றுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும். மேலும், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவதால் உடலும், மனமும் சீராக செயல்பட ஏதுவாக அமைகிறது.

Next Story