பனை ஓலை கொழுக்கட்டை


பனை ஓலை கொழுக்கட்டை
x
தினத்தந்தி 15 Nov 2021 5:30 AM GMT (Updated: 13 Nov 2021 11:11 AM GMT)

இனிப்பான, சுவையான பனை ஓலை கொழுக்கட்டை மற்றும் கார்த்திகை அப்பம் செய்வதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

பனை குருத்து ஓலை - தேவைக்கேற்றவாறு

பச்சரிசி மாவு - ¼ கிலோ

வெல்லம் - 200 கிராம்

தேங்காய்த் துருவல் - 1 கப்

எள் - 1 டீஸ்பூன்

பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன்

ஏலக்காய் - சிறிதளவு

நெய் அல்லது நல்லெண்ணெய் - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு



செய்முறை

முதலில் பனை குருத்து ஓலையை தேவையான அளவில் வெட்டி வைக்கவும். இட்லி வேக வைக்கும் சட்டியில் உலர்ந்த துணியை விரித்து அதில் பச்சரிசி மாவைக் கொட்டி பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
வாணலியில் பாசிப்பருப்பு, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். 

பின்பு வெல்லம், பொடித்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் போன்றவற்றை கலந்து பாகு தயார் செய்து, வடிகட்டிக் கொள்ளவும்.

இப்போது பச்சரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அந்தக் கலவையில் வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை நன்றாக பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு வெந்நீர் சேர்த்து பிசையலாம்.

பனை ஓலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, பிசைந்த மாவை அதற்குள் வைத்து ஓலையை மூடி, இட்லி சட்டியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.


கார்த்திகை அப்பம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

வெல்லம் - ¾ ஆழாக்கு

வாழைப்பழம் - 1

தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் - ¼ டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு



செய்முறை

பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் கலந்து கரைத்து, வடிகட்டி வைக்கவும். பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது பச்சரிசி, ஏலக்காய்த் தூள், வாழைப்பழம் மற்றும் தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்சியில் போட்டு, தேவையான அளவு வெல்லக் கரைசலை ஊற்றி, நன்றாக அரைக்கவும்.

இந்த மாவை, தோசை மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிய குழி கரண்டி அளவு மாவை மெதுவாக எண்ணெய்யில் ஊற்றி மிதமான தீயில் வேக வைக்கவும். பூரி போல உப்பி மேல் எழும்பி வரும் போது மெதுவாக திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்தவுடன் அப்பத்தை எண்ணெய்யில் இருந்து வெளியே எடுக்கலாம். மிருதுவான, சுவையான கார்த்திகை அப்பம் தயார். 

Next Story