பனிக்கால உதடுகள் பராமரிப்பு


பனிக்கால உதடுகள் பராமரிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2022 5:30 AM GMT (Updated: 9 Jan 2022 5:52 AM GMT)

குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

னிக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது உதடுகள்தான். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. எனவே, ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாமல் உடனே வறண்டு போகும் தன்மை கொண்டது. சிலருக்கு உதடுகளில் வெடிப்பு, தோல் உரிதல் மற்றும் உதடுகளைச் சுற்றி புண் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இங்கு காண்போம்.

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாதபோது உதடுகள் வறண்டு போகும். இதனை தவிர்ப்பதற்கு சிலர் வேதிப்பொருட்கள் கலந்த லிப் பாமை பயன்படுத்துவதுண்டு. இது தற்காலிக ஈரப்பதத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், அதனை பயன்படுத்தாத நேரங்களில் அதிகப்படியான வறட்சியை ஏற்படுத்தும்.

குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

மேலும் உதடுகள் வறட்சியடைவதை தவிர்க்க, வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும். பிராக்கோலி, வெள்ளரி, கோதுமை, கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பசும்பால், கேரட், முட்டை மற்றும் மாம்பழம் முதலிய உணவுப் பொருட்கள், உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கும்.

எவ்வாறு நீக்கலாம்?
தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய்:
உதடு வெடிப்பு மற்றும் புண்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாக செயல்படும். இயற்கையிலேயே தேங்காய் எண்ணெய், புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. அதேபோல் வெண்ணெய்யிலும் புண்களை ஆற்றும் சக்தி உள்ளது. எனவே இவை இரண்டையும் தனித் தனியாக உதடுகளில் தடவி, மசாஜ் செய்து வரும்போது வெடிப்பு மற்றும் புண்கள் மறையும்.

லிப் பேக்:
தேன் - ¼ தேக்கரண்டி, தக்காளி சாறு - ¼ தேக்கரண்டி, சர்க்கரை - ¼ தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் 2 துளிகள், இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சுத்தமான பருத்தித் துணியை பசும்பாலில் நனைத்து உதடுகளை சுத்தப்படுத்தவும். பின்பு மேற்கூறிய லிப் பேக்கை காலையிலும், இரவு தூங்கும்  முன்பும் உதடுகளில் தடவி  வரவும். இது உதடுகளை வெடிப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, சிவப்பாகவும் மாற்றும்.

லிப் பாம்:
ஷியா வெண்ணெய் - 1 தேக்கரண்டி, தேன் மெழுகு - 1 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் - ½ தேக்கரண்டி, லெமன் எஸ்ஸென்ஷியல் ஆயில் - ½  தேக்கரண்டி, ரோஸ் எஸ்ஸென்ஷியல் ஆயில் - ½ தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். 

பின்னர் அடுப்பில் மிதமான தீயில், அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், ஷியா வெண்ணெய் கலவை உள்ள பாத்திரத்தை நீரில் வைக்கவும். வெண்ணெய் மற்ற பொருட்களுடன் சேர்ந்து உருகியதும் ஆறவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து உதடுகளில் தடவி வரவும். இது எந்த தீங்கும் விளைவிக்காத ‘லிப் பாம்’. உதடுகளை ஈரப்பதத்துடனும், ஆரோக்கியத்துடனும் பாதுகாக்கும். 

Next Story