ரெயின்போ டயட்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ரெயின்போ டயட் வழிவகுக்கிறது. அதுபற்றி தெரிந்து கொள்வோமா..?
நாம் சிறப்பாக செயல்படுவதற்கு உடல்நலம் முக்கியமானதாகும். உடல் சீராக இயங்குவதற்கு சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அனைத்து சத்துக்களும் கிடைப்பதற்கு ‘ரெயின்போ டயட்’ முறை உதவுகிறது. இது எளிமையான ஒன்றாகும்.
இந்த உணவு முறையின் அமைப்பை, இதன் பெயரிலேயே புரிந்துகொள்ள முடியும். பல்வேறு நிறங்களிலான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ‘ரெயின்போ டயட்’ ஆகும்.
உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு நிறமும், பைட்டோ கெமிக்கலை மையமாகக் கொண்டது. இந்த நிறத்திற்கு காரணமும் ‘பைட்டோ கெமிக்கல்கள்’ தான்.
இவை உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும், நச்சுக்களுக்கு எதிராக போராடவும் உதவக்கூடிய ஆக்ஸிஜனேற்றிகளை உருவாக்குகின்றன.
‘ரெயின் போ டயட்’ முறையில் ஒவ்வொரு உணவுப் பொருட்களும், ஒவ்வொரு ஊட்டச்சத்தைக் கொடுக்கின்றன.
பச்சை:
பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள் இதில் அடங்கும். கீரைகளில் உள்ள குளோரோபில், பிரீ ராடிக்கிள்களை சம நிலையில் வைத்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. இவற்றில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் பி, சி, ஈ, கே, தாதுக்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன.
மஞ்சள்:
மஞ்சள் நிறத்தில் உள்ள வாழைப்பழம், மாம்பழம், அன்னாசி, பீச் ஆகியவை இதில் அடங்கும்.
மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இவை தீர்வளிக்கின்றன. ‘ஆன்டி ஏஜிங்’ என்று சொல்லப்படும் வயோதிகத்தைக் குறைப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. தோல், எலும்பு, முடி ஆகியவை ஆரோக்கியமாக செயல்பட இவை உதவுகின்றன.
சிவப்பு:
ஆப்பிள், தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை மற்றும் பீட்ரூட் ஆகியவை இவற்றில் அடங்கும். ‘லைகோபீன்’ எனும் நிறமி, இந்த சிவப்பு நிறத்திற்குக் காரணமாகும்.
இதய நோய்கள், சில வகை புற்றுநோய்களைத் தடுக்கிறது. ஆப்பிளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் குடலை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
ஊதா:
ப்ளூபெர்ரீஸ், திராட்சை, கத்தரிக்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை இதில் அடங்கும்.
இவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டி ஏஜிங் ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.இதய நோய்கள் மற்றும் அல்சைமர் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகின்றன.
ஆரஞ்சு:
பூசணிக்காய், ஆரஞ்சு, கின்னோவ், கேரட் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் வைட்டமின் ஏ அதிக அளவு காணப்படுவதால், கண் பார்வை சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக விளங்குகின்றன.
ஆரஞ்சு நிற உணவுப் பொருள்களில், பைபர், லைகோபீன் மற்றும் பிளாவனாய்டுகள், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை காணப்படுகின்றன.
வெள்ளை:
காளான்கள், டர்னிப்ஸ், டோபு, சுண்டல் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இவை காணப்படுகின்றன.
இவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.வைட்டமின் சி மற்றும் கே, கால்சியம், புரதங்கள் ஆகியவை வெள்ளை நிற உணவுப் பொருட்களில் அதிகம் கிடைக்கின்றன.
இதில் உள்ள ரசாயனங்கள் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதிலும் உதவுகின்றன.
இவ்வாறு ‘ரெயின்போ டயட்’டில் உள்ள உணவுப் பொருட்கள் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்திலும், நோய் எதிர்பாற்றலிலும் சிறப்பான விளைவுகளை உண்டாக்குகின்றன.
Related Tags :
Next Story