ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் கர்லா கட்டைப் பயிற்சி - திவ்யா அபிராமி


ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் கர்லா கட்டைப் பயிற்சி  - திவ்யா அபிராமி
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 23 April 2022 12:01 PM GMT)

கர்லா கட்டைப் பயிற்சி, நமது மூதாதையர்கள் செய்த தமிழர்களின் பாரம்பரியமான பயிற்சி முறை. போர் வீரர்கள், மல்யுத்த வீரர்கள், வில் அம்பு எய்தவர்கள் அனைவரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நான் ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி பெற்றேன்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது திவ்யா அபிராமி. இவர் கர்லா கட்டைப் பயிற்சியாளராக இருக்கிறார். இப்போது  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி
அளித்து வருகிறார்.

பல்வேறு சூழ்நிலைகளில் தோல்வியைச் சந்தித்து மனதளவில் தளர்ந்தபோது, கர்லா கட்டைப் பயிற்சி இவருக்கு மாற்றத்தை ஏற்படுத்தித் தந்தது. இந்தப் பயிற்சியால் உடல் அளவிலும், மனதளவிலும் பெண்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இனி அவருடன் பேசுவோம்.

உங்களைப் பற்றி....?
என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்கு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக மூன்று முறை முயன்றும், என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. அந்தத் தொடர் தோல்வியை என் மனம் ஏற்க மறுத்தது.
அந்தத் தோல்விக்குப்பின், அடுத்த நான்கு வருடங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்.  உடல் மிகவும் பருமனாகி எடை அதிகமானது. முடி கொட்ட ஆரம்பித்தது. 

முகப்பருக்கள் அதிகமாக உண்டானது. எங்காவது லேசாக இடித்துக் கொண்டால் அந்த இடம் பச்சையாக மாறி கன்றிப் போய் விடும். அடிக்கடி உடல் உபாதைகள் வரும். மலச்சிக்கல் பிரச்சினை பெரிய அளவில் இருந்தது.

அப்போதுதான் என்னுடைய குரு அஷ்வின் சக்கரவா அறிமுகம் கிடைத்தது. அவர் “எனக்கு 16 வகையான நோய்கள் இருந்தன. அதையெல்லாம் இந்த கர்லா கட்டையின் மூலம்தான் சரி செய்தேன்” என்றார். அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

அவருடன் தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். படிப்படியாக என்னுடைய உடல் உபாதைகள் அனைத்தும்  குணமாக  ஆரம்பித்தன. நோய் எதிர்ப்பு சக்தி 
அதிகரித்தது. மனதளவிலும் தெளிவு ஏற்பட ஆரம்பித்தது.

இந்தப் பயிற்சியைச் செய்யும் போது மனதிலும், உடம்பிலும் தைரியம் உண்டாகும். இந்த நம்பிக்கையை என்னைப் போன்ற மகளிருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வாழ்வில் எல்லா ஏற்ற இறக்கத்தையும் தாண்டி வர முடியும் என்பது இந்தப் பயிற்சியில் அனுபவமாகக் கிடைத்தது.

கர்லா கட்டைப் பயிற்சி, நமது மூதாதையர்கள் செய்த தமிழர்களின் பாரம்பரியமான பயிற்சி முறை. போர் வீரர்கள், மல்யுத்த வீரர்கள், வில் அம்பு எய்தவர்கள் அனைவரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நான் ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி பெற்றேன்.

தற்போது ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன். உலகளவில் மாணவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள், தொழில் முனைவோர்கள் என்று  எல்லா தரப்பு மக்களும் இந்தப் பயிற்சிக்கு வருகிறார்கள்.

இந்தக் கலையை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பயிற்சி ஒரு தற்காப்புக்கலையும் கூட. ‘கலீம்’ என்ற தற்காப்புக்கலையை நான் கற்றுக் கொண்டு வரு
கிறேன். இந்தக் கலையைக் கூட பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆசை. பெண்கள் சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தற்காப்புக் கலை அவசியம். 

Next Story