கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் நடவடிக்கைகள்


கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 8:35 AM GMT)

வீட்டில் ‘ஷவர்’ இருந்தால் அதில் சில நிமிடங்கள் குளிக்கலாம். அது உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெற உதவியாக இருக்கும்.

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் முக்கியமானது உடலின் நீர் இழப்பாகும். அதன் காரணமாக தோல் வறட்சி அடைவதுடன் ‘சன் பர்ன்’ என்ற சரும பாதிப்பும் ஏற்படுகிறது.

பெண்களின் உடலில், சிறுநீர்த்தொற்றுக்கு காரணமான கிருமிகள், நீர் இழப்பு காரணமாக உடலிலேயே தங்கிவிடுகின்றன. அதனால், சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
சருமத்தில் வறட்சி, எரிச்சல், வீக்கம், அரிப்பு, தலைவலி, சோர்வு ஆகியவை இருப்பது நீரிழப்பின் அறிகுறியாகும். 

ஒருவரது உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை சிறுநீரின் நிறத்தைக்கொண்டு அறியலாம். சிறுநீர் தெளிவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருப்பது இயல்பானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நீர் இழப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

எனவே பெண்கள் ஒரு நாளில் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். வழக்கமாக பருகும் தண்ணீரில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, புதினா ஆகியவற்றை கலந்து பருகலாம். வெள்ளரியை அப்படியே மென்று சாப்பிடலாம். 

பழச்சாறுகளை கடையில் வாங்கும்போது ‘சாக்கரின்’ உள்ளிட்ட இதர ரசாயன நிறமூட்டிகள் இல்லாத இயற்கை பானங்களை தேர்வு செய்து வாங்குவது நல்லது. 

கோடை வெப்பம் காரணமாக வியர்வை பெருகி ஏற்படும் நீரிழப்பை தடுக்க, குளிர்ந்த நீரில் குளிக்கலாம். 

வீட்டில் ‘ஷவர்’ இருந்தால் அதில் சில நிமிடங்கள் குளிக்கலாம். அது உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெற உதவியாக இருக்கும்.

உடலில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாப்பதில் பொட்டாசியம் என்ற தாதுச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இது இளநீரில் நிறைய உள்ளது. இளநீர் பருகுவது பல வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கும். அதில் உள்ள கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் ஆகிய தாதுச்சத்துக்கள் உடலில் உள்ள திசுக்களின் ஈரப்பதத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

காபி, டீ, சோடா, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் ஆகியவை உடல் திசுக்களின் ஈரப்பதத்தை எளிதாக உலரச்செய்து விடுகின்றன. அத்துடன் அவற்றில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கையே விளைவிக்கிறது.

கோடை காலத்தில் அவ்வப்போது புரூட் சாலட், வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதுடன், அவ்வப்போது இளநீரும் பருகி வரலாம். இதன் மூலம் கோடையின் பாதிப்புகளை எளிதாக கடந்து செல்ல முடியும். 

Next Story