சருமத்துக்கேற்ற சோப் தேர்வு செய்தல்


சருமத்துக்கேற்ற சோப் தேர்வு செய்தல்
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 8:48 AM GMT)

சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் அதில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் கிளிசரின் கலந்த சோப்களை பயன்படுத்தலாம்.

முன்பெல்லாம் குளியலுக்கு வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி அரைத்த ‘நலுங்கு மாவு’ எனும் குளியல் பொடியைப் பயன்படுத்தி வந்தார்கள்.
 
முழுவதும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்த அந்தப் பொடியின் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது பலரும் ‘சோப்’ உபயோகித்து வருகிறோம். அவரவர் சருமத்துக்கு ஏற்ற வகையில் சோப்பைத் தேர்வு செய்வது முக்கியமானது. இதில் கலக்கப்படும் ரசாயனங்கள், ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும். எனவே இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப் பயன்படுத்துவது சிறந்தது. சருமத்துக்கு ஏற்ற வகையில் சோப்பை தேர்வு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

வறண்ட சருமம்
சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் அதில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் கிளிசரின் கலந்த சோப்களை பயன்படுத்தலாம். ஆட்டுப்பால் கலந்த சோப்கள் வறண்ட சருமத்துக்கு ஏற்றது. கலப்பட பொருட்கள் கலந்து தயாரிக்கப்படாத சோப்பை பயன்படுத்தலாம்.

சென்சிடிவ் அல்லது உணர்திறன் சருமம்
உணர்திறன் கொண்ட சருமத்தினர் வண்ணம் மற்றும் வாசனை இல்லாத சோப்களை பயன்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையோடு இந்த சோப்களை வாங்குவது நல்லது.

எண்ணெய் பசை சருமம்
சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் ஆன்டி பாக்டீரியல் சோப் வகைகளை பயன்படுத்தலாம். குறிப்பாக வேப்பிலை, சாலிசிலிக் அமிலம் இருக்கும் சோப் வகைகள் சருமத்தில் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.

அதிகமான எண்ணெய் பசை கொண்டவர்கள், சருமத்துளைகளிலும் அடைப்பு இருப்பதை உணரலாம். இவர்கள் லாவெண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்களை பயன்படுத்தலாம். முகத்தில் சோப்புக்கு மாற்றாக பேஸ் வாஷ் பயன்படுத்தலாம்.

மூலிகை சோப்
ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே பலர் சோப் தயாரித்து விற்கிறார்கள். இந்த வகை சோப்பில் தேங்காய் எண்ணெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்துக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும்.
தழும்புகள் நீக்க வைட்டமின் ‘ஏ’ சருமத்தில் இருக்கும் தழும்புகளை நீக்கவும், வைட்டமின் ‘பி’ சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே சருமத்தில் இருக்கும் தழும்புகளை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் வைட்டமின்கள் கலந்த சோப்களை பயன்படுத்தலாம்.

ஸ்கிரப் சோப்
சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ஸ்கிரப் சோப் பயன்படும். இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் இந்த சோப் வகைகளை உடலுக்கு தேய்த்துக் குளிக்கலாம்.
பாதுகாப்பான சோப் அதிக வாசனை இல்லாமல் இருக்க வேண்டும். வாசனைக்காக ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டிருக்ககூடும். இயற்கையான நிறத்தில் அல்லது லேசான நிறத்தில் இருக்கும் சோப்புகளை மட்டும் பார்த்து வாங்குங்கள். அடர்த்தியான நிறம் கொண்ட சோப்களை தவிர்ப்பதே நல்லது. 

Next Story