சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான தலைமைப் பண்புகள்


சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான தலைமைப் பண்புகள்
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 9:09 AM GMT)

பிரச்சினையைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேருக்குநேர் சந்திப்பது தலைமை பண்புக்கு மகுடமாக அமையும். தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

லக மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்ற நிலையில், அவர்களுக்கு அளிக்கப்படும் அதிகாரம் சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமூக உளவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2020-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு புள்ளி விவரங்களின் படி நமது நாட்டில் உள்ள மொத்த பணியிடங்களில் பெண்களின் பங்கு 24 சதவீதம் ஆகும். சீனாவில் இது 60 சதவீதமாக உள்ளது.

சுய வளர்ச்சி அடைந்த ஒரு பெண்தான், குடும்பம் மற்றும் சமூக அளவிலான வளர்ச்சியை பற்றி சிந்திக்கிறாள். அதனால், பெண்கள் கல்வியுடன், தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது 
இன்றையச் சூழலில் அவசியமானது. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தலைமை பண்புகள் பற்றிய தொகுப்பை இங்கே பார்ப்போம்.

தலைமை பண்பு மற்றவர்களை பற்றியும் சிந்திக்கும் மனநிலை உள்ளவர்களுக்கே பொருந்தும். குறிப்பாக, பிரச்சினையில் சிக்கியவர்களுக்கு, அதன் தன்மையை அறிந்து வழிகாட்டுவது தலைமை பண்புக்கு உதாரணமாகும்.

மற்றவர்களுக்கு கட்டளை இடாமல், அவர்களை இயல்பாகக் கவருவது தலைமை பண்பின் சிறப்புத் தன்மையாகும். அதற்கு தன்னிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். வெற்றியில் மற்றவர்களுக்கு உரிய பங்கை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவது கூடாது. திறமை எங்கிருந்தாலும் மனதார பாராட்ட வேண்டும். மற்றவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் குணம் தலைமை பண்புக்கு அவசியமானது.

குடும்பம், பணியிடம், சமூகம் ஆகிய எந்த இடமாக இருந்தாலும், பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். தற்காலிக தீர்வுகள் பொருத்தமாக இருக்காது. அதுமட்டுமல்லாமல், எடுத்த காரியத்தில் தீர்மானமாகவும் கவனமாகவும் செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும்.

சொல், செயல் ஆகிய இரண்டும் நேர்கோட்டில் இருக்க வேண்டும். ‘இவர் சொன்னதை செய்பவர்' என்ற பெயர் தலைமை பண்புக்கு அத்தியாவசியமானது. அத்துடன், மற்றவர்களின் நம்பிக்கை, எண்ணம் ஆகியவற்றை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம்.

பிரச்சினையைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேருக்குநேர் சந்திப்பது தலைமை பண்புக்கு மகுடமாக அமையும். தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நடைமுறையில் சாத்தியம் உள்ள விஷயங்களை பற்றித்தான் பேச வேண்டும். நேரடியான சிந்தனை, எளிமையான பேச்சு, கடைப்பிடிக்கத் தக்க வழிமுறைகள் என்று எளிய செயல்திட்டங்களால்  வெற்றியை அடைய வேண்டும். 

தலைமை பண்புக்கு நல்ல உதாரணம் நிதானமான செயல்பாடு. எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாத குணம் மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்து காட்டும். எடுத்த தீர்மானத்திலிருந்து எந்த நிலையிலும் மாறாமல் நிற்பதும் அவசியம்.

தலைமை பண்பை வளர்த்துக்கொள்பவர்கள் தங்களது தோற்றத்தில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அழகு என்பதை விட தோற்றத்தில் நேர்த்தி என்பதே முக்கியம். அதனால் தலைமை பண்புக்கு பேச்சு, செயல், தோற்றம் ஆகிய 3 நிலைகளிலும் நேர்த்தி என்ற இயல்பு அவசியமானது. 

Next Story