பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அவசியம்
குழந்தைகளின் வழக்கமான செயல்பாட்டில் வித்தியாசம் ஏற்படும்போது, பெற்றோர் அதைக் கவனித்து அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தினால், பிற்காலத்தில் ஏற்படும் ஆபத்தில் இருந்து முன்னரே காப்பாற்றலாம்.
சமீபகாலமாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும் முக்கியமானது. பெண் குழந்தைகளுக்கு இது தொடர்பாக எவற்றையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்பதைப் பற்றிய தொகுப்பு இதோ…
உடல் பாகங்கள் குறித்த தெளிவு:
பெண் குழந்தைகளுக்கு விவரம் தெரியும் பருவத்தில் உடலின் முக்கிய பாகங்கள், பிறப்புறுப்புகள், அதன் பெயர் என அனைத்தையும் தெளிவாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவற்றில் எத்தகைய உணர்வு ஏற்படும் என்பதையும் அம்மா சொல்லித் தருவது நல்லது.
இதன் மூலம், பிறர் மூலமாக பாலியல் தொல்லை ஏற்பட்டால், பெண் குழந்தைகள் தெளிவாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க முடியும்.
தொடுதலின் வித்தியாசம்:
எதேச்சையாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் எத்தகையது என்பதை, குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஆண் நண்பர்கள் தொடும்போது, அவை எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை குழந்தையின் 3 வயதில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான், அவர்களால் ஆபத்து ஏற்படும் போது உடனடியாக சுதாரித்துத் தப்பிக்க இயலும்.
பழக்கத்தில் கவனம்:
நண்பர்களை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். பேச்சு, பழக்கம் என அனைத்திலும் குறிப்பிட்ட எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, பெண் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
உடன் பழகும் நபர்களின் பார்வையில் ஏற்படும் வித்தியாசத்தைப் பிரித்து பார்க்கும் பழக்கத்தைக் கற்றுத்தருவது அவசியம்.
ரகசியங்களைப் பகிர்தல்:
பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சிறு பிரச்சினையாக இருந்தாலும், பெற்றோரிடம் சரியான நேரத்தில் பகிர கற்றுத் தர வேண்டும்.
குழந்தைகளின் வழக்கமான செயல்பாட்டில் வித்தியாசம் ஏற்படும்போது, பெற்றோர் அதைக் கவனித்து அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தினால், பிற்காலத்தில் ஏற்படும் ஆபத்தில் இருந்து முன்னரே காப்பாற்றலாம்.
புகைப்படத்துக்கு தடை:
நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும்போது, குழுவாக இருக்கையில் மட்டுமே எடுக்கும்படி அறிவுறுத்த வேண்டும். வெளியிடங்களில் தனி நபராகவோ, ஒரு ஆண் நண்பருடன் மட்டுமோ இணைந்து புகைப்படம் எடுப்பது, உடல் உறுப்புகளை புகைப்படம் எடுப்பது போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது.
தைரியமாக எதிர்கொள்ளுதல்:
பிரச்சினையைக் கண்டு பயப்படாமல், அதை எவ்வாறு சமாளித்துத் தப்பிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருவது அவசியம். பாதுகாப்பு இல்லாத இடமாக இருந்தால், அங்கு தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
செல்லும் இடத்தில் ஆபத்து இருப்பதை உணர்ந்தால், அங்கிருந்து விலகி, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்குக் கற்றுத் தருவது முக்கியமானது.
Related Tags :
Next Story