விழித்திறன் பாதித்தவர்களுக்கு உதவும் ‘மாணவிகளின் கண்டுபிடிப்பு’
சந்தையில் ஏற்கனவே இருக்கும் பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருவியை வாங்குவதற்கு அதிக பொருட்செலவு ஆகும். நாங்கள் மலிவான பொருள் மற்றும் எளிதான உற்பத்தி முறையைப் பயன்படுத்துகிறோம்.
பிரான்சு நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பிரெய்ல் என்பவரின் கண்டுபிடிப்பான ‘பிரெய்லி எழுத்து முறை’ பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
பிரெய்லி என்பது பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வை உள்ளவர்கள் தங்கள் விரல்களால் தடவி படிக்கக்கூடிய புள்ளிகளின் அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் தாய்மொழிகளில் பிரெய்லியைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் 6 கல்லூரி மாணவிகள்!
சாந்தனி தோஷி, கிரேஸ் லி, ஜியாலின் ஷி, போனி வாங், சார்லின் சியா மற்றும் டானியா யூ ஆகியோர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெட்டீரியல் சயின்ஸ், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்ற மாணவிகள்.
தங்கள் கல்வி நிறுவனத்தில் நடந்த போட்டிக்காக ‘அச்சிடப்பட்ட எழுத்துக்களை பிரெய்லி எழுத்துக்களாக உடனடியாக மொழிபெயர்க்கும் சாதனம்’ உருவாக்குவதற்கு அவர்கள் திட்டம் வகுத்தனர். பல இடர்பாடுகளுக்கு மத்தியில், 15 மணி நேரத்தில் அதனை தயாரித்தனர். அந்தக் கருவிக்கு ‘டக்டைல்’ (தொட்டு உணரக்கூடிய) என்று பெயர் சூட்டினார்கள்.
அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் கொண்ட புத்தகத்தின் ஒரு பகுதியை அந்தக் கருவியில் பொருத்த வேண்டும். சாதனத்தில் உள்ள கேமரா, குறிப்பிட்ட பகுதியில் உள்ள எழுத்துக்களை மைக்ரோ கண்ட்ரோலருக்கு தகவல் அனுப்பும். மின்காந்த செயல்படுத்தும் பொறிமுறையின் மூலம், சாதனத்தின் மேற்புறத்தில் உள்ள பிரெய்லி எழுத்துக்கள் அதற்கேற்றார்போல மேலும் கீழுமாக அசையும். இதன் மூலம் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களின் தகவல் பிரெய்லி எழுத்து வாசகமாக மாற்றப்படும். பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி அடுத்த பகுதிக்குச் செல்லும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி பார்வையற்றவர்கள் சரளமாக எதை வேண்டுமானாலும் படிக்க முடியும்.
“சந்தையில் ஏற்கனவே இருக்கும் பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருவியை வாங்குவதற்கு அதிக பொருட்செலவு ஆகும். நாங்கள் மலிவான பொருள் மற்றும் எளிதான உற்பத்தி முறையைப் பயன்படுத்துகிறோம். எனவே இந்தக் கருவியை குறைந்த விலையில் வாங்க முடியும். இது பார்வையற்ற சமூகத்திற்கு தகவல்களை புரிந்து கொள்ள ஒரு சிறந்த வழி என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்கிறார் இந்தக் கருவியை கண்டுபிடித்த மாணவிகளுள் ஒருவரான டானியா யூ.
“பெண்களாலும் சாதிக்க முடியும். சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும்” என்கிறார்கள் இந்த மாணவிகள்.
Related Tags :
Next Story