மூலிகைப் பொருட்கள் தயாரிப்பில் வெற்றி பெற்ற கவிதா


மூலிகைப் பொருட்கள் தயாரிப்பில் வெற்றி பெற்ற கவிதா
x
தினத்தந்தி 17 Jan 2022 5:30 AM GMT (Updated: 15 Jan 2022 10:39 AM GMT)

என்னைப்போன்று திருமணமான பெண்களும் வீட்டில் இருந்தே இத்தொழிலை ஆரம்பிக்கலாம். குறைந்த முதலீட்டில் ஆரம்பித்தாலே நிறைவாக சம்பாதிக்க முடியும்.

ற்போது பலரும் தாங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையாகவும், நன்மை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என மூலிகைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு மாறிவருகின்றனர். இம்மாற்றத்துக்கான தொடக்கத்தை 15 வருடங்களுக்கு முன்னரே திருநெல்வேலியைச் சேர்ந்த கவிதா நிகழ்த்தியுள்ளார். இது குறித்து அவருடைய உரையாடல்..

“நான் கடந்த 15 வருடங்களாக மூலிகை மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனக்கு திருமணமான பிறகு கணவரின் வழிகாட்டுதலின்படி இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். 

முதலில் எங்கள் பகுதியில் மட்டும் ஆரம்பித்த விற்பனை தற்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் விரிவடைந்துள்ளது. 

நாய் கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, ஓமக்குச்சி, ஆலங்குச்சி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பொடி, துளசி பொடி, கருங்காளி என 65-க்கும் மேற்பட்ட மூலிகைகளைக் கொண்டு மூலிகை சாம்பிராணி தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை கூந்தல் பராமரிப்புக்கும் இந்த மூலிகை சாம்பிராணியைப் பயன்படுத்தலாம். தலைக்கு குளித்து முடித்தபின்பு சாம்பிராணி தூபம் போடுவதன் மூலம் பேன், பொடுகு, சைனஸ், தலைவலி, தலையில் நீர்கோர்த்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

இவற்றைத் தவிர, தர்ப்பை புல் பாய், 30-க்கும் மேற்பட்ட மூலிகைகளைக் கொண்டு ஊதுவர்த்தி போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். தர்ப்பைப் புல் பாயில் அமர்ந்து யோகா செய்தல், உணவு சாப்பிடுதல், குழந்தைகள் படித்தல் போன்ற வேலைகளை செய்யும்போது உடல் மற்றும் மனநலம் மேம்படும்.

நீண்ட நேரம் நிலைத்து எரியும் வகையில் மூலிகை ஊதுவர்த்தியை தயார் செய்கிறோம். இந்த ஊதுவர்த்தியை யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றைச் செய்யும்போதும், படிக்கும்போதும் பயன்படுத்தினால் கவனச்சிதறல் ஏற்படாது.

குறைந்த முதலீட்டில் இத்தொழிலை தொடங்கினேன். தற்போது போதுமான வருமானமும், சிறந்த பொருளை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கிறது. என்னைப்போன்று திருமணமான பெண்களும் வீட்டில் இருந்தே இத்தொழிலை ஆரம்பிக்கலாம். குறைந்த முதலீட்டில் ஆரம்பித்தாலே நிறைவாக சம்பாதிக்க முடியும்” என்கிறார் கவிதா.

Next Story