“கர்ப்ப காலத்தில் ‘பேபிமூன்’ போகலாம்” - அனுபமா


“கர்ப்ப காலத்தில் ‘பேபிமூன்’ போகலாம்” - அனுபமா
x
தினத்தந்தி 31 Jan 2022 11:00 AM IST (Updated: 29 Jan 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள். கர்ப்பிணிகளுக்கு எது சரி? எது தவறு? என்ற யோசனையில் பயமும், குழப்பமும்தான் அதிகமாகும்.

பெண்களின் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமான கர்ப்ப காலத்தை, மகிழ்வுடன் கொண்டாட வேண்டாமா? என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததன் விளைவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கென பயிற்சி மையத்தைத் தொடங்கினார் திருப்பூரைச் சேர்ந்த அனுபமா. இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ள அவருடன் உரையாடிய போது...

கர்ப்பிணிப் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்? 
கர்ப்ப காலம் பெண்களது வாழ்வில் முக்கியமானது; என்றும் நினைவில் நிற்பது. இன்றையச் சூழலில் பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில்லை. மாறாக, எப்படி நடக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? உடற்பயிற்சி செய்யலாமா? என எல்லாவற்றையும் சிந்தித்து, பயத்துடனே கழிக்கின்றனர். என்னுடைய முதல் பிரசவத்தின் அனுபவமும் அவ்வாறே இருந்தது. 

கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள். கர்ப்பிணிகளுக்கு எது சரி? எது தவறு? என்ற யோசனையில் பயமும், குழப்பமும்தான் அதிகமாகும். 

பெரும்பாலான பெண்களின் பிரசவகால அனுபவமும் இதுதான். நமக்குள் உருவாகியுள்ள கருவினை நல்லபடியாக உலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற பொறுப்புணர்வே, பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மகிழ்ச்சியான மகப்பேறுவை பெண்கள் அனுபவிப்பதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினேன்.

அது தொடர்பான முறையான கல்வி கற்ற பின்னரே பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். 2013-ம் ஆண்டில் குழந்தை நல ஆலோசகர், தாய்ப்பால் ஆலோசகர், கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி ஆலோசகர், பிறந்த குழந்தை நல ஆலோசகர், குழந்தைகளுக்கான உணவு ஆலோசகர் போன்ற படிப்புகளைப் படித்து முடித்தேன். முறையான ஆலோசகராக கர்ப்பிணிகளுக்கான பயிற்சி மையத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்.

இதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டனரா? 
இன்றைய பெண்களிடத்தில் கர்ப்ப கால விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன் இதற்கு நேரெதிரான சூழலே நிலவியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எதற்குப் பயிற்சி? நாங்களெல்லாம் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகா குழந்தை பெற்றுக் கொண்டோம்? என்பதே முதல் கேள்வியாக இருந்தது. 

கர்ப்ப காலப் பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்தோம். என் கணவரும், மாமியாரும் எனது முயற்சிக்கு ஆதரவு அளித்து ஊக்கம் கொடுத்தனர். முதன் முதலில் 3 பெண்கள் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கிடைத்த இன்பமான அனுபவத்தை, மகப்பேறுவை எதிர்நோக்கிக் காத்திருந்த மற்ற பெண்களிடம் கூற, பயிற்சிக்கு இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இன்று, மகப்பேறு என்றால் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவேண்டும் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.  



‘ஹனிமூன்’ பற்றி அனைவருக்கும் தெரியும். ‘பேபிமூன்’ பற்றி கூறுங்கள்? கர்ப்பம் தரித்தவுடன், கணவன்-மனைவி இருவராக சேர்ந்து, புதுப்புது இடங்களுக்கு சுற்றுலா செல்வது, கரு உருவான மகிழ்ச்சியை கொண்டாடுவதுதான் ‘பேபிமூன்’. புதுமண தம்பதிகளின் ‘ஹனிமூன்’ போல, உலக நாடுகளில் மிகவும் பிரபலமான கொண்டாட்டம் இது. ஆனால் நம்மை சுற்றிதான் பல தவறான புரிதல்கள், நம்பிக்கைகள், கட்டுக்கதைகள் இருக்கின்றன. கர்ப்பம் தரித்த பின்பு, பயணம் செய்யவே கூடாது என்று சொல்வார்கள். 

இந்தப் பயத்திலே, என்னுடைய முதல் பிரசவத்தின்போது 5 மாதங்கள் நான் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. ஆனால், நான் 2-வது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்த மறுநாள், திருப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தேன். 250 கி.மீ சாலைவழி பயணம் மேற்கொண்டேன். கர்ப்பம் தரித்த முதல் நாளில் இருந்து தினமும் பயிற்சிக்கு வரும் பெண்களோடு சேர்ந்து நடனம் ஆடினேன். கருவிலுள்ள சிசுவிற்கு நல்லதொரு கருவியல் அனுபவத்தை அளிக்க வேண்டும். என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் அனைத்து பெண்களையும் கணவருடன் ‘பேபிமூன்’ செல்ல அறிவுறுத்துகிறேன். 

தற்போது  கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்புகள் குறைந்து, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வெளியே செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் ஆரோக்கிய குறைவு இருந்தால், அவர்களை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே பயணம் மேற்கொள்ள அறிவுறுத்துகிறேன்.

உடற்பயிற்சி,  நடனமும் கூட உடல் ஆரோக்கியத்தில் எவ்வித சிக்கலும் இல்லாதவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறேன்.

கர்ப்பிணிகளுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?
கர்ப்ப காலத்தை எப்படி மகிழ்வுடன் கழிப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதே எங்களது நோக்கம். அதற்காக, கர்ப்பத்தைப் பற்றிய பயத்தைப் போக்கும் வகையிலும், அது பற்றிய மூட நம்பிக்கைகளைப் போக்கும் வகையிலும் ஆலோசனைகள் சொல்வோம். பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறோம். சுகப்பிரசவத்திற்கான இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் பயிற்சிகளும் சொல்லித் தருகிறோம். கர்ப்பிணிப் பெண்களுடன் அவர்களது தாய், மாமியார், கணவன் என அனைவருக்கும் ஒரு நாள் குடும்ப ஆலோசனை வகுப்பு எடுக்கிறோம். 

பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் புகட்டும் பெண்களின் மனநிலை எவ்வாறாக  இருக்கும்? அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து எத்தகைய ஆதரவு தேவைப்படும்? 
பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது? போன்றவற்றை அந்த ஒரு நாள் வகுப்பில் கற்றுத் தருகிறோம். கர்ப்ப காலம் தொடங்கி பிரசவத்துக்குபின் தாய்ப்பால் அளிக்கும் முறை வரை, முழு மகப்பேறுக்கான பயிற்சியினை அளிக்கிறோம். உரையாடல் முறையில்தான் பயிற்சிகள் நடைபெறும். உடற்பயிற்சிகளோடு யோகா, கோலாட்டம், நடனம் போன்ற வகுப்புகளையும் எடுக்கிறோம். பயிற்சி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு வீட்டுப்பாடமும் உண்டு. 

கொரோனா காலத்து வகுப்புகள் குறித்து?
தொடக்கத்திலிருந்தே ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை எடுத்து வருகிறேன். பொது முடக்கத்தால் ஆன்லைனில் பயிற்சி எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 

உண்மையில், இந்த லாக்டவுன் கணவன்-மனைவிக்கு இடையே நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்காக முயற்சித்து வந்தவர்கள் பலரும், இந்த லாக்டவுன் காலத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர். 

லாக்டவுனில் பலர் இணையவழியில் பயிற்சி எடுத்துகொண்டனர். தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். தாய்ப்பால்தான முகாமும் நடத்தி வருகிறேன். 

Next Story