தென்றல் நடத்தும் ‘தேவதைகளின் கூட்டம்’


தென்றல் நடத்தும் ‘தேவதைகளின் கூட்டம்’
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:15 AM GMT)

குழந்தைகளின் முழு ஆளுமைப் பண்பை வளர்த்து கல்வி எனும் நோக்கத்தை நிறைவு செய்யவும், அவர்களின் மேடைக் கூச்சத்தைப் போக்கவும், தனித்திறன்களை வளர்க்கவும், வெளிப்படுத்தவும் ஒரு களமாக ‘தேவதைகள் கூட்டம்’ எனும் அமைப்பைத் தொடங்கினேன்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் தென்றல். பள்ளிக் குழந்தைகளை இணைத்து ‘தேவதைகள் கூட்டம்’ என்ற பெயரில் கதை சொல்லும் நிகழ்வை நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தினார். அவரிடம் உரையாடியதில் இருந்து...

உங்களைப் பற்றி?
நான் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருமருகல் என்னும் சிற்றூரில் பிறந்தேன். என்னுடைய தந்தை பாலசுப்ரமணியன், தாய் ஆனந்தா. இருவருமே ஆசிரியர்கள். 1991-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். காரைக்குடியில் நான் படித்த தொடக்கப் பள்ளியிலேயே தற்போது பணியாற்றுகிறேன். முனைவர் படிப்பிற்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

எனது கணவர் சரவணனும் அரசுப் பள்ளி ஆசிரியர். மகன் மனோஜ், இளங்கலை பொறியியல் முடித்து, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மகள் ரிந்தியா முதுகலை படிக்கிறார்.

மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியையாக மாறியது எப்படி?
மாணவர்களை எனது குழந்தைகளாகப் பாவித்து அன்பு செலுத்துவதும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுமே அடிப்படைக் காரணம்.

பூங்கா, நூலகம், தச்சுப் பட்டறை போன்ற பல இடங்களுக்குக் களப்பயணங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறேன். வகுப்பறையில் பொம்மலாட்டம், ஓரங்க நாடகம், நடனம், பாடல், கதை சொல்லுதல், உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்றவற்றை செய்வதற்கு மாணவர்களை ஊக்குவிப்பேன்.

பள்ளியில் ஆண்டுக்கு ஒருமுறை அறிவியல் கண்காட்சி நடத்தும்போது, மாணவர்களுக்குப் பிடித்தவற்றை அவர்களின் பங்களிப்புடன் செய்து வருவதாலும் குழந்தைகள் நட்புணர்வோடு என்னிடம் நெருங்கிப் பழகுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் இருக்கிறேன்.

‘தேவதைகளின் கூட்டம்’ நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?
நன்றாகப் படிக்கும் மாணவர்களும், ‘துறுதுறு’வென்று இருக்கும் குழந்தைகளும் தங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கு அச்சமும், தயக்கமும் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

குழந்தைகளின் முழு ஆளுமைப் பண்பை  வளர்த்து கல்வி எனும் நோக்கத்தை நிறைவு செய்யவும்,  அவர்களின் மேடைக் கூச்சத்தைப் போக்கவும், தனித்திறன்களை வளர்க்கவும், வெளிப்படுத்தவும் ஒரு களமாக ‘தேவதைகள் கூட்டம்’ எனும் அமைப்பைத் தொடங்கினேன்.

என் வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில், பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இணைத்து முதலில் கதை சொல்லும் பயிற்சியை அவர்களுக்கு அளித்தேன். பிறகு பாடல், நடனம், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், கழிவுப் பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல் எனப் பல திறன்களையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்தேன். இவ்வாறு மாதம் ஒருமுறை எங்கள் வீட்டில் சந்திப்பு நடத்தி, ஊக்கமூட்டி வருகிறேன்.



கொரோனா  ஊரடங்கில் இந்தக் கூட்டத்தை எவ்வாறு நடத்தினீர்கள்?
குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பொழுது, அவர்களின் சுட்டித்தனத்தையும், விளையாட்டுகளையும் ரசிக்கும் மனநிலையில் பெற்றோர் இல்லை. குழந்தைகள் வீட்டுக்கு வெளியே விளையாடக்கூட வர இயலாமல் அலைபேசியும், தொலைக்காட்சியுமே கதி என்றிருந்தனர். இவற்றில் இருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காகவும், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அவர்களுக்கு நல்வழி காட்டவும், வாட்ஸ் ஆப் வழியாக ‘தேவதைகள் கூட்டம்’ குழுவைத் தொடங்கி நடத்தி வருகிறேன். 64 பள்ளிகளைச் சேர்ந்த 103 குழந்தைகள் தினசரி செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டார்கள். பெற்றோர்களும் ஆதரவளித்தனர்.

இதுவரை எத்தனை கூட்டத்தை நடத்தி இருக்கிறீர்கள்?
மூன்று வருடங்களாக ‘தேவதைகள் கூட்டத்தின்’ மாதாந்திர சந்திப்பு நடைபெறுகிறது. ஆரம்பத்தில் ஐந்தாறு குழந்தைகள் பங்கேற்றனர். இப்பொழுது 20 குழந்தைகள் வரையிலும் கலந்து கொள்கின்றனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் கதை சொல்லும் வாய்ப்பு அளிக்கப்படுவதால், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் அவர்களின் சொந்தக் கதைகளை மட்டும் நூலாக்கம் செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறேன்.

நூலகப் புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்கி, கதை படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்து வருகிறேன். இணையக் கூட்டங்களில் இந்தக் குழந்தைகள் தாம் படித்தவற்றை, குழந்தை இலக்கிய நூல் மதிப்பீடும் செய்கிறார்கள்.

உங்களின் ‘வாசல் பள்ளி' திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?
கடந்த 2020-ம் ஆண்டு, ஊரடங்கில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எங்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் 90 சதவீதம் பேர் வறுமையான சூழலில் உள்ளவர்கள். அவர்களது பெற்றோர்களும் உரிய கல்வி அறிவு பெறாதவர்கள். ஆசிரியரைத் தவிர கல்வி கற்பதற்கு வேறு எந்த ஆதாரமோ, வளமோ கிடையாது. இந்நிலையில் அவர்கள் எப்படிப் படிப்பார்கள் என்று வேதனைப்பட்டேன்.

‘நாமே மாணவர்களின் வீடுகளுக்குச் சென்றால் என்ன?' என்று தோன்றியது. மாணவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து அல்லது அவர்கள் வீட்டுக்கு அருகில் பூட்டிக்கிடக்கும் கடைகளின் வாசலில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்கலாமே, திறந்தவெளியில் படிக்க வைக்கலாமே என்று தோன்றியது. அப்போது பிறந்ததுதான் ‘வாசல் பள்ளி’ எனும் திட்டம்.

ஒரு நாளுக்கு, ஒரு பகுதி என வாரத்தின் ஆறு நாட்களுக்கும், ஆறு பகுதிகளுக்குச் சென்று வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து பாடம் நடத்தினேன். அங்கிருந்த மற்ற பெற்றோரும் தனியார் பள்ளியில் படிக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லித் தருமாறு கேட்டார்கள். அதனால் அவர்களுக்கும் பாடம் நடத்தினேன்.

விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்துவது எப்படி?
குழந்தைகளின் குடும்பப் பின்னணி, தாய் அல்லது தந்தையின் ஆதரவின்மை, வறுமை, மது குடிப்பதனால் ஏற்படும் சண்டைகள்,  பெற்றோர்களுக்குள் பிரிவு போன்றவற்றையெல்லாம் வெள்ளந்தியாகக் குழந்தைகள் சொன்ன பொழுது எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்தக் குழந்தைகளை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டேன். எனவேதான், விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறேன்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் பற்றி சொல்லுங்கள்?
சக்தி விருது, லட்சிய ஆசிரியர் விருது,  கல்விச் செம்மல், கலைச்சுடர், சிறந்த ஆசிரியர், நிலாச்சுடர் விருது, சிகரம் தொட்ட ஆசிரியர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். 

Next Story