கல்வி மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும் - சுஷ்மிதா


கல்வி மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும் - சுஷ்மிதா
x
தினத்தந்தி 21 Feb 2022 5:30 AM GMT (Updated: 19 Feb 2022 11:49 AM GMT)

கல்வி, மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும். அதே சமயம் 21-ம் நூற்றாண்டில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

ல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்களுடன் இணைந்து, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்கான டிஜிட்டல் விளையாட்டை வடிவமைத்து வருகிறார் சுஷ்மிதா கிருஷ்ணன். திருச்சி காட்டூரைச் சேர்ந்த இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் துறையில் முதுகலை இறுதியாண்டு  மாணவி.

இதோ அவர் பேசுகிறார்.

‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் இருந்தது. 7-ம் வகுப்பு படிக்கும்போது ‘நிலைப்புத்தன்மை’ (Sustainability) குறித்து சர்வதேச அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதி வருகிறேன்.

சுற்றுச்சூழலைப் பற்றி கற்க வேண்டும் என்பதற்காகவே, உயர் கல்வியில் உயிர் அறிவியல் துறையை தேர்வு செய்து படித்து வருகிறேன். 

இணையதளங்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ)  நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றேன்.

மகாத்மா காந்தி கல்வி மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் மூத்த அறிஞர்களுடன், ‘தலைமுறைகளுக்கு இடையே கல்வி’ எனும் உலகளாவிய கலந்துரையாடலை யுனெஸ்கோ நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இந்தியப் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன்.

‘கல்வியை மறு வடிவமைத்தல்’ எனும் பொருளில் கல்விக் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தேன். ‘வருங்கால ஆசிரியர்கள் குறித்து எங்கள் கோரிக்கைகள் மற்றும் கனவுகள்’ என்ற தலைப்பில், நான் எழுதிய கட்டுரை யுனெஸ்கோ முதன்மை இதழான ‘நீலப் புள்ளி’ என்ற இதழில் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

கல்வி, மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும். அதே சமயம் 21-ம் நூற்றாண்டில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.



இதனைத் தொடர்ந்து மீண்டும் யுனெஸ்கோ  நிறுவனத்தில்  செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இம்முறை கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவை மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், ‘கேம் சேஞ்சிங்’  பங்களிப்பிற்காக உலக அளவில் 50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 22 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டோம். இதனுடைய முக்கிய நோக்கமே,  விளையாட்டின் மூலம்  சுற்றுச்சூழல் குறித்த தாக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களுடன்  இணைந்து, இந்த விளையாட்டை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம், மாணவர்கள்  சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை, அவர்கள் விளையாடும் விளையாட்டின் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

சுற்றுச்சூழல் கல்வி குறித்த விழிப்புணர்வை  அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பாடப் புத்தகத்தைக் கடந்து, இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முயற்சியிலும் மாணவர்களிடத்தில்  கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் என்னுடைய வாழ்வின் லட்சியம்'' என்கிறார் சுஷ்மிதா.

Next Story