கடலில் நீந்தி சாதித்த சஞ்சனா
எனக்குத் தண்ணீரில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கடற்கரைக்குச் சென்றால் அதிக நேரம் அலைகளில் விளையாடிக் கொண்டிருப்பேன். எனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் நீச்சல் வகுப்பில் சேர்த்து விட்டனர். என்னுடைய முயற்சியாலும், பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தாலும் விரைவாக நீச்சல் கற்றுக் கொண்டேன்.
சென்னை கோட்டூர் புரத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி சஞ்சனா. இவர் கடந்த வருடம் மெரினா கடலில் பத்து கிலோமீட்டர் தொலைவை, குறைந்த நேரத்தில் நீந்தி கடந்திருக்கிறார். தான் நீச்சல் கற்பதற்கு, உறவினர்கள் விதித்த தடைகளையெல்லாம் தாண்டி சாதித்திருக்கிறார். அவருடன் நடந்த நேர்காணல்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள் சஞ்சனா…
நான் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தந்தை பெருமாள், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார். தாய் சந்தியா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். எனது தம்பி ஹர்ஷவர்தன், முதலாம் வகுப்பு படிக்கிறான். எனக்கு மிகவும் பிடித்தது நீச்சல். அதற்கடுத்தது ஓவியம் வரைதல்.
நீச்சலில் ஆர்வம் வந்தது எப்படி?
எனக்குத் தண்ணீரில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கடற்கரைக்குச் சென்றால் அதிக நேரம் அலைகளில் விளையாடிக் கொண்டிருப்பேன். எனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் நீச்சல் வகுப்பில் சேர்த்து விட்டனர். என்னுடைய முயற்சியாலும், பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தாலும் விரைவாக நீச்சல் கற்றுக் கொண்டேன். ‘நீச்சலில் சாதிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் பயிற்சி செய்கிறேன்.
இதுவரை நீங்கள் செய்துள்ள சாதனைகள் என்னென்ன?
மாவட்ட அளவிலான 50 மீட்டர் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறேன். மற்றொரு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். தற்போது கடலில் பத்து கிலோமீட்டர் தொலைவை, ஒரு மணி நேரம் 50 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் இந்தச் சாதனையைப் படைத்திருக்கும் முதல் சிறுமி நான்தான்.
இதற்காக எத்தகைய பயிற்சிகளை மேற்கொண்டீர்கள்?
பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனைப் படைத்த குற்றாலீஸ்வரனுக்குப் பயிற்சி அளித்த நீச்சல் வீரர் கே.எஸ்.இளங்கோவன் தான், எனக்கும் ஆரம்பம் முதல் பயிற்சி அளித்து வருகிறார். நான் பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து சாதனை படைக்க, ஓராண்டு காலமாக காலையிலும் மாலையிலும், நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் கடுமையான பயிற்சி அளித்தார்.
நீங்கள் செய்த சாதனைக்கு என்ன பரிசு கிடைத்தது?
கோப்பையும், சான்றிதழும் அளித்தார்கள். நான் பயிலும் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை, எனக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
உங்களின் லட்சியம் என்ன?
குற்றாலீஸ்வரன் போல எனது பெயர் நிலைக்கும் அளவுக்கு, நீச்சலில் பெரிதாகச் சாதிக்க வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் கடலில் 30 கிலோ மீட்டர் தொலைவை நீந்திக் கடக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும். இவையே எனது லட்சியம்.
Related Tags :
Next Story