வெற்றிக்கான வழிகளை கற்பிக்கும் பத்மாவதி


வெற்றிக்கான வழிகளை கற்பிக்கும் பத்மாவதி
x
தினத்தந்தி 21 March 2022 11:00 AM IST (Updated: 19 March 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடிகிறது.

‘நோக்கம் சிறந்ததாக இருந்தால், முன்னேற்றம் பெரியதாக இருக்கும்’ என்பார்கள். இதை மெய்யாக்கி வருகிறார் பத்மாவதி முரளிதரன். சென்னையில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கியவர், மாணவர்களுக்கு ஏட்டுப் பாடங்களை மட்டும் கற்றுத் தராமல், வெளி உலகம் சார்ந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது, பள்ளிப் படிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி எவ்வாறு பயணிப்பது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வழிநடத்தினார்.

மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவதோடு, தனது திறமைகளையும் வளர்த்துக் கொள்வதற்காக உயர்கல்வி கற்றார். பின்பு, ஆங்கில மொழி பயிற்சியாளராக தனது பணியைத் தொடர்ந்தவர், வணிகத்தில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 
கடந்த 14 வருடங்களாக இந்தத் துறையில் பயணிக்கும் இவர், ‘1 மில்லியன் தொழில் முனைவோர்களை தங்கள் வணிகத்தில் முன்னேறச் செய்வது மற்றும் இளம் தொழில் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களது தொழிலில் முன்னேற்றம் அடையச் செய்வது’ என்னும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார். தனது வெற்றிப் பயணம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை…

“நான் உளவியல் துறையில் பட்டம் பெற்றிருக்கிறேன். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘சைக்கோமெட்ரிக் அஸெஸ்ஸர் இன் எபிலிட்டி, பெர்சனாலிட்டி அண்டு கிரிட்டிக்கல் திங்கிங்’ எனும் படிப்பை முடித்திருக்கிறேன். இதன் மூலம், என்னிடம் ஆலோசனை பெறுவதற்காக வரும் தொழில் முனைவோர்களின் பலம் மற்றும் பலவீனம் போன்றவற்றை தெரிந்துகொள்வேன். பின்பு அவர்களின் தொழில் முறைகளுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குவேன்.

இவ்வாறு ஒரு வணிக நிறுவனத்தை எப்படி தொடங்குவது? லாபகரமாக நடத்துவது? அதன் நேரமேலாண்மை, செலவு, விற்பனை போன்றவற்றில் எவ்வாறு கவனம் செலுத்துவது? எதனால் விற்பனை குறைகிறது? எவ்வாறு விற்பனையை அதிகரிக்கச் செய்வது? வாடிக்கையாளர்களின் தேவை என்ன? எவ்வாறு அவர்களுக்கு வணிகச் சேவையை கொண்டு போய் சேர்ப்பது? போன்றவை குறித்து கற்றுக் கொடுக்கிறேன். வணிகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த பலவிதமான ஆலோசனைகளை வழங்கி, தொழிலில் வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறேன்.



குடும்பத்துக்கும், தொழிலுக்கும் எவ்வாறு நேரம் ஒதுக்குகிறீர்கள்?
பெண்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடிகிறது. நானும் நேரத்தின் அருமையை உணர்ந்து செயல்படுவேன். அதிகாலையில் எழுந்து அன்றைய நாளுக்கான வேலைகளை குறித்துக் கொண்டு வீட்டு வேலைகள், குடும்பப் பொறுப்புகள், அலுவலகப் பணிகள் இவை அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி அதற்கேற்ப என் பணியை செய்வேன். எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்தால் நம் பணியை விரைவாக செய்து முடிக்கலாம். இன்றைய சூழ்நிலையில், வளரும் குழந்தைகளுக்கு நாம் நேர மேலாண்மை குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் வேலைகளை எவ்வாறு பிரித்து செய்வது என்பதை கற்றுக்கொண்டு சிறப்பாக செய்யப் பழகுவார்கள். ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களே செய்துகொள்வதற்கு  கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் நாம் நம் வேலையை செய்வதற்கு அதிகமாக நேரம் கிடைக்கும்.

நீங்கள் முன்னுதாரணமாக நினைப்பவர் யார்?
எனக்கு எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பது எனது அம்மா. அவர் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். பெண்கள் உழைக்க வேண்டும்,  தனக்கென்று நல்ல வழியை தேர்ந்தெடுத்து அதன்படி நடக்க வேண்டும், அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும், சுயமாக சம்பாதிக்க வேண்டும், யாரிடமும் எதையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்தார். மேலும் எனக்கு அப்துல் கலாம் மற்றும் இறையன்பு ஐ.ஏ.எஸ். ேபான்றவர்களின் கருத்துகள் மிகவும் பிடிக்கும். இவர்கள் எழுதிய புத்தகங்களை ஆர்வத்தோடு படிப்பேன்.

உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?
மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும்போதே அவர்களுக்கு தங்களின் பாதையைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். தங்கள் வாழ்வின் அடுத்த கட்ட நிலை என்ன என்பதை உணர்த்தும் விதமாக, அவர்களுடைய திறமைகளைக் கண்டறிந்து தகுந்த பயிற்சிகளை பள்ளிப் பருவத்திலேயே அளிக்க வேண்டும். அதன்மூலம் அவர்கள் எதிர்காலத்தில் என்ன ஆக விரும்புகிறார்கள் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியும். இது அவர்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிவகை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு செய்தால் இளம் தொழிலதிபர்களை நம்மால் எளிதாக உருவாக்க முடியும்.

தொழில் முனைவோர் தங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
தொழில் முனைவோர் அன்றைய நாளுக்கான வேலைகளை திட்டமிட்டு, கைகளால் எழுதி  குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அந்த  நாளின் இறுதியில் திட்டமிட்டபடியே வேலைகள் முடிக்கப்பட்டதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். நாள்தோறும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது சிந்தனையை மேம்படுத்து வதற்கு  உதவும். இவ்வாறு செயல்பட்டால் தொழில்முனைவோர் தம் இலக்கை எளிதில் அடைய முடியும். 

Next Story