பாரம்பரியக் கலையை பயிற்றுவிக்கும் சமீனா
மற்ற விளையாட்டுகளை விட, சிலம்பத்திற்கான அங்கீகாரம் மற்றும் சலுகைகள் சற்றுக் குறைவாக இருப்பதால், பல பெற்றோர்கள் சிலம்பத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு யோசிக்கின்றனர். எனது உறவினர்களும் இதையேக் கூறி சிலம்பம் கற்றுக்கொள்வதற்கு தடை விதித்தனர். ஆனால் எனது பெற்றோர் மிகுந்த ஆர்வத்தோடு என்னை சிலம்பம் கற்றுக்கொள்ள அனுமதித்தனர்.
‘பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் ஆண்-பெண் பாகுபாடுகள் பார்க்கக்கூடாது’ என்கிறார் சமீனா பானு. தமிழ் மக்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம், இயற்கையோடு இணைந்த கலையாகும். இதில் பயிற்றுவிக்கப்படும் பல நுணுக்கங்களை பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் செயல்பாடுகள் மூலம் முன்னோர்கள் அறிந்துகொண்டனர் என கூறப்படுகிறது. இத்தகைய பழமை வாய்ந்த கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, பல சாதனைகள் புரிந்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த சமீனா.
தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று, கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றார். 21 வயதான இவர், சிலம்பக்கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். அவரது பேட்டி…
‘‘சிறு வயதில் இருந்தே எனக்கு சிலம்பம் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது. தம்பி-தங்கையோடு இணைந்து சிலம்பம் கற்றுக்கொண்டேன். ஆரம்பித்த சில நாட்களிலேயே ஆர்வத்தோடு நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது சிலம்பப் போட்டியில் பங்கேற்று முதல் முறையாக மாவட்ட அளவில் பரிசு வென்றேன். பின்பு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் உதவியோடு பயிற்சியைத் தொடர்ந்தேன்.
அதுவரை அந்தப் பள்ளியில் சிலம்பத்திற்கு என எந்த வகுப்புகளும் கிடையாது. நான் வெற்றி பெற்ற பின்பு, எல்லோருக்கும் சிலம்பம் கற்பிக்க வேண்டும் என்று தனியாக வகுப்புகள் எடுக்கத் தொடங்கினர். இன்று அப்பள்ளியிலேயே பல மாணவர்களுக்கு நான் பயிற்சி அளித்து வருகிறேன்.
எனது அப்பா மகபுக், ஆட்டோ ஓட்டுநர். அம்மா ஜனத் நிஷா, கால் டாக்ஸி ஓட்டுநர். வீட்டில் பணப் பற்றாக்குறை இருந்தாலும், எங்களது தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர்.
மற்ற விளையாட்டுகளை விட, சிலம்பத்திற்கான அங்கீகாரம் மற்றும் சலுகைகள் சற்றுக் குறைவாக இருப்பதால், பல பெற்றோர்கள் சிலம்பத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு யோசிக்கின்றனர். எனது உறவினர்களும் இதையேக் கூறி சிலம்பம் கற்றுக்கொள்வதற்கு தடை விதித்தனர். ஆனால் எனது பெற்றோர் மிகுந்த ஆர்வத்தோடு என்னை சிலம்பம் கற்றுக்கொள்ள அனுமதித்தனர்.
அவர்களின் விருப்பமும், என்னுடைய ஆர்வமும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் சிறந்து விளங்க உதவியது. ‘கலந்துகொள்ளும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற்றால் மட்டுமே இந்தக் கலை குறித்துப் பிறருக்கு விழிப்புணர்வு உண்டாக்க நம்மால் முடியும்’ என்று உறுதியாக நம்பினேன்.
எங்கு போட்டிகள் நடந்தாலும், பெற்றோர் என்னை நம்பிக்கையோடு அனுப்பி வைத்தனர். அவர்களுடைய நம்பிக்கை என்னை 2016-ம் ஆண்டு தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றிட உதவியது. தேசிய அளவில் வெற்றி பெற்ற பின்பு அதற்கான பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றுக்கொண்டேன். அப்போது அவர் “சிலம்பக் கலையில் இன்னும் பல சாதனைகளைத் தொடர்ந்து செய்திட வேண்டும்” என்றார். அவரின் வாழ்த்தும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.
பள்ளிப்படிப்பு முடித்ததும், தனியார் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தேன். கல்லூரியின் முதலாம் ஆண்டில் இருந்து சிலம்பம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். கடந்த ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்துகொண்டேன். அணி வகுப்பிற்காக டெல்லி செல்லப் போகிறேன் என்று தெரிந்ததும், இந்தக் கலையை கற்றுக்கொள்ள வேண்டாம் என்று தடுத்த உறவினர்களும் என்னைப் பாராட்டினார்கள். அதைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் பாராட்டும், ஆதரவும் அதிகமாக கிடைக்கத் தொடங்கின.
பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி அளிப்பது, போட்டிகளில் பங்கேற்பது என்றில்லாமல், திருச்சியில் நடக்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் சிலம்புக் கலையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று குழுவாக இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறோம். அழிந்துவரும் சிலம்பக் கலையை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; இந்தக் கலையை மீட்டெடுக்க வேண்டும் என்று முடிந்தவரை எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறோம்.
கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சென்று வாரத்திற்கு இரண்டு நாள் பயிற்சி அளித்து வருகிறேன். சிலம்பம் கற்க ஆர்வம் இருந்தும் கற்றுக் கொள்ள வசதி இல்லாத மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வத்தோடு வரும் மாணவர்கள் மூலம், பிறருக்கும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பூங்காக்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன்.
அதைப் பார்த்த பலர், அவர்களுடைய குழந்தைகளையும் சிலம்பம் கற்றுக்கொள்வதற்கு சேர்த்தனர். எனது ஒவ்வொரு முயற்சியிலும், இந்தக் கலையைப் பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனுடைய முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்பதில் அதிக கவனத்தோடு செயல்பட்டு வருகிறேன்.
இக்காலத்தில் தற்காப்புக்கு மட்டுமில்லாமல், நமது உடல்நலத்தைப் பேணுவதற்கும் சிலம்பம் கற்பது அவசியமாகும். இதனால் உடலும் மனமும் வலுவடையும், சமூகத்தில் தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் திகழ்வோம்.
பெண்களுக்கு நான் கூற விரும்புவது, ‘நமது பாரம்பரியக் கலையை ஆண்-பெண் என்ற பேதமின்றி கற்று, நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு பெண்கள் மிகுந்த பங்காற்ற வேண்டும்’.
சிலம்பத்தில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, சுருள், வாள், மான்கொம்பு, அடிவரிசை, குத்துவரிசை, வீடுமுறை பாடங்கள் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தையும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுக்கொண்டு, அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
கடந்த ஆண்டு முதல் அரசு சலுகைகளில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் நம்முடைய பாரம்பரியக் கலையான சிலம்பக் கலையை, பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்கு பெற்றோர்களும் முன்வர வேண்டும்.
கல்வியோடு இணைந்து நம்முடைய பாரம்பரியக் கலைகளையும், மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story