‘திறமைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்’ - ஆனந்தி


‘திறமைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்’ -  ஆனந்தி
x
தினத்தந்தி 16 May 2022 5:30 AM GMT (Updated: 14 May 2022 12:21 PM GMT)

துணி மற்றும் காகிதங்களைக் கொண்டு பைகள் தயாரித்தேன். இதில் என்னைப்போன்ற பெண்களையும், எனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். நாங்கள் தயாரித்த பைகளின் நேர்த்தியால், ஆர்டர்கள் அதிகமாக வரத்தொடங்கின. வருமானத்தை அனைவரும் சமமாகப் பிரித்துக்கொண்டோம்.

“சாதிப்பதற்கு வாய்ப்புகள் மட்டும் போதும். உடல் ரீதியிலான குறைபாடுகள் ஒரு பொருட்டு இல்லை'' என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் ஆனந்தி. சென்னை செங்குன்றம் பகுதியில் வசித்து வரும் இவர், சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்தவர். தொலைதூரக் கல்வி மூலம் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்திருக்கிறார். வறுமையால் சிறுவயதில் இருந்தே விடுதியிலும், ஆசிரமத்திலும் தங்கி படித்து வந்தார்.

படிப்பு முடிந்து வீட்டுக்கு சென்றபோது, அங்கு இருந்த வறுமையும், குடும்பத்தினரின் ஆதரவின்மையும், இவரை மனதளவில் தளர்ச்சி அடையச் செய்தது. இருந்தபோதும் தன்னம்பிக்கையை விடாமல், தொண்டு நிறுவனத்தின் மூலம் கணினி வடிவமைப்பு நுட்பத்தை கற்றுக்கொண்டே வேலை தேடினார். அவரது உடல் ஊனத்தை காரணமாகக்கூறி பல இடங்களில் அவரை நிராகரித்தார்கள். அவற்றை எல்லாம் எதிர்கொண்டு, முன்னேறியது எப்படி என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

“உங்களால் எப்படி வேலைக்கு வர முடியும்? என்ற கேள்வி அனைத்து இடங்களிலும் என்னைத் துரத்தியது. பல தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பின்பு, ஓரிடத்தில் எனக்கான கதவுகள் திறந்தன.
‘டெலிகாலர் வேலை உள்ளது. ஆனால்  நீங்கள் இந்த வேலையைச் சரியாக செய்வீர்களா?’ என்று தயங்கினார்கள். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்து, ‘நீங்கள் வேலை செய்வதைப் பொறுத்து தான் இந்த வேலை உறுதியாகும்' என்ற நிபந்தனையோடு வேலை அளித்தார்கள்.

குறைந்த ஊதியத்தில், அங்கேயே தங்கி வேலை செய்யத் தொடங்கினேன். என்னுடைய பணியை  சிறப்பாகச் செய்ததால், அதற்கு அடுத்த மாதமே எனது ஊதியம் அதிகமானது.
இதற்கிடையே அம்மாவின் உடல்நலம் மோசமானதால், அந்த வேலையை தொடரமுடியாமல் மீண்டும்  வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்ற சில நாட்களில் பழைய ஆதரவற்ற நிலை தொடர்ந்தது. எவ்வளவு முயற்சித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

அப்போதுதான் ‘சுய தொழில் செய்து முன்னேறி, என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரவேண்டும்’ என்று எண்ணினேன். அந்த எண்ணம் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தொழில் தொடங்குவதற்காக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து  உதவினார். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது.

துணி மற்றும் காகிதங்களைக் கொண்டு பைகள் தயாரித்தேன். இதில் என்னைப்போன்ற பெண்களையும், எனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். நாங்கள் தயாரித்த பைகளின் நேர்த்தியால், ஆர்டர்கள் அதிகமாக வரத்தொடங்கின. வருமானத்தை அனைவரும் சமமாகப் பிரித்துக்கொண்டோம்.

கொரோனா பரவல் காரணமாக தொழில் முடங்கியது. நண்பர்கள் விலகிக்கொண்டார்கள். தற்போது நான் மட்டுமே இதில் ஈடுபட்டு வருகிறேன். மீண்டும் தொழிலை பழையபடி முன்னேற்றிச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தால், என்னைப் போன்ற பலருக்கு நான் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆனந்தி. 

Next Story