சினிமா பிடிக்கும் - ஸ்ருதி செல்வம்


சினிமா  பிடிக்கும் - ஸ்ருதி செல்வம்
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 10:23 AM GMT)

உடற்பயிற்சி செய்யும் தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அதன் மூலம் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அதன் வழியாக தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து, திரைப்பட நடிகையாக முன்னேறியவர்கள் வரிசையில் புதுவரவு ஸ்ருதி செல்வம். அவருடன் நடந்த உரையாடல்...

உங்களைப் பற்றி?
சொந்த ஊர் சேலம். அப்பா செல்வம் விமானப் படை அதிகாரி. அவர் பணிபுரிந்தது வட மாநிலங்களில் என்பதால், எனது பள்ளிப் படிப்பெல்லாம் அங்கேதான் முடிந்தது. கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். ‘ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங்' படித்தேன். அம்மா ஹேமலதா இல்லத்தரசி. தம்பி விசேஷ்.

நடிக்க வந்தது எப்படி?
கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்தபோது என் நட்பு வட்டத்தில் சிலர், ‘உன்னுடைய தோற்றம் ‘போட்டோ ஜெனிக்’கா இருக்கு. நீ ஏன் சினிமாவில் நடிக்க முயற்சி செய்யக்கூடாது?' என்று கேட்டு ஆர்வத்தைத் தூண்டினார்கள். அதே காலகட்டத்தில் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் பங்களிப்பில் உருவான ஆல்பங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு வரவேற்பும், விருதுகளும் கிடைத்தன. 

அந்த ஆல்பம் வெளியான ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் என்னைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. அதன் மூலம் குறும்படங்களில் நடிப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். இனி நம் எதிர்காலம் நடிப்பு சார்ந்துதான் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

உடற்பயிற்சி செய்யும் தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அதன் மூலம் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அதன் வழியாக தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.

நெடுந்தொடர்களில் நடித்தது பற்றி சொல்லுங்கள்?
‘கடைக்குட்டி சிங்கம்', ‘தாழம்பூ', ‘யாரடி நீ மோகினி' போன்ற தொடர்களில் நடித்தேன். பின்னர் சினிமா வாய்ப்புகளுக்கான முயற்சியில் இறங்கினேன். நடனப் பயிற்சியாளர் சாண்டி கதாநாயகனாக நடித்துள்ள படத்தில், கதாநாயகியாக நடித்தேன். மேலும் சில படங்களில் நடிக்கவிருக்கிறேன். பேசப்படக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற வேண்டும், சிறந்த நடிகைக்கான விருதுகள் பெற வேண்டும் என்பது எனது லட்சியம்.

பிடித்த உணவுகள்?
அசைவ உணவுகளின் மீது விருப்பம் அதிகம். அவை உடற்பருமனை அதிகரிப்பதாகத் தோன்றியதன் காரணமாக சைவ உணவுகளுக்கு பழகிக் கொண்டேன்.

உங்கள் தனித்திறமைகள்?
கல்லூரி நாட்களில் ‘பாலே’ உள்ளிட்ட சில வகை நடனங்கள் கற்றுக் கொண்டேன். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி இருக்கிறேன். பைக் ஓட்டக் கற்றுக் கொண்டு, பைக் ரேஸில் ஈடுபடுகிறேன். சைக்கிளில் 100 கி.மீ., 200 கி.மீ. என நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது, ஸ்கேட்டிங்கில் ஈடுபடுவது, பேட்மிண்டன் விளையாடுவது என பல விஷயங்களில் திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். இப்போது சிலம்பம் கற்றுக் வருகிறேன்.

பொழுதுபோக்கு?
ஆங்கில நாவல்கள் படிப்பேன். சேத்தன் பகத்தின் அத்தனை படைப்புகளையும் படித்துள்ளேன். வீட்டில் தோட்டத்தைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவேன்.  

Next Story