துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை - சங்கவி
‘புனிதா’ கதாபாத்திரம் தைரியமான, பக்குவப்பட்ட பெண். ஆரம்பத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை. போகப்போகத்தான் அதன் அருமை புரிந்தது.
ஆதலினால் காதல் செய்வீர்’ எனும் இணையத் தொடரில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் சங்கவி. அவர் நடித்துக்கொண்டிருக்கும் ‘புனிதா’ என்ற கதாபாத்திரத்துக்கும், அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது பேட்டி…
உங்களைப் பற்றி?
அரியலூர் அருகேயுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்தேன். சென்னைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. கணிதத்தில் இளங்கலை முடித்திருக்கிறேன். தந்தை ராஜேந்திரன் என்னுடன் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்துவிட்டார். சகோதரர் பிரபாகரன் தனது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.
நடிக்க வந்தது எப்படி?
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினேன். அப்போது, சுந்தர் சி. இயக்கத்தில், முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோதி’ என்ற மெகா தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனவே முழுநேரப் பணியை ராஜினாமா செய்துவிட்டு நடிக்க வந்தேன். அந்தத் தொடர் எதிர்பாராதவிதமாக மூன்றே மாதங்களில் நிறுத்தப்பட்டது. செய்து கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு, நடிப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
நடிகையாக உங்கள் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?
எனது குடும்பத்தில் யாருமே நடிப்புத் துறையில் இருந்ததில்லை. எந்த அனுபவமும் இல்லாமல் நடிப்பதற்கு வந்தேன். ‘ஜோதி’ தொடரில் நடித்தபோது மிகவும் சிரமப்பட்டேன். நடிப்பது சுலபம் இல்லை என்பதை உணர்ந்தேன். அதேசமயம், வழக்கமான முழு நேரப்பணி போல இல்லாமல் புதுப்புது மனிதர்கள், புதுப்புது காட்சிகள் என படப்பிடிப்பு ஆர்வமுள்ளதாக இருந்தது. அதன் காரணமாக, அந்தத் தொடர் நின்றுபோனபின், முழுநேரப் பணியைத் தேடாமல், நடிப்புக்கான வாய்ப்பை தேடினேன்.
அடுத்து ஒரு தொடரில் நடித்தேன், அதுவும் கைவிடப்பட்டது. பிறகு, ‘ஆதலினால் காதல் செய்வீர்’ இணையத் தொடரில் நடிப்பதற்கான தேர்வில் பங்கேற்றேன். ‘புனிதா’ என்ற கதாபாத்திரத்துக்கு மட்டும் 20 பேர் போட்டியிட்டார்கள். அவர்களில் பலர் பிரபலமானவர்கள். ஆனால், இறுதியாக நான் தேர்வு செய்யப்பட்டேன்.
புனிதாவாக நடிக்கும் அனுபவம் பற்றி?
‘புனிதா’ எனக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்போல நான் உணர்கிறேன். அதில் பணியாற்றும் எல்லோருமே இளைஞர்கள். நேர்மறை எண்ணங்களையும், ஒரு குடும்பத்தில் வாழ்வது போன்ற உணர்வையும் எனக்கு அது அளிக்கிறது. ‘ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரில் நடிப்பது என்னால் மறக்கவே முடியாத அனுபவமாக இருக்கும்.
நீங்களும் ‘புனிதா’வைப் போன்ற பெண்ணா?
‘புனிதா’ கதாபாத்திரம் தைரியமான, பக்குவப்பட்ட பெண். ஆரம்பத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை. போகப்போகத்தான் அதன் அருமை புரிந்தது. இந்தத் தொடரிலே எனக்கு மிகவும் பிடித்தது ‘புனிதா’ கதாபாத்திரம்தான். அது எனக்குக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. ‘புனிதா’ போன்று தைரியமாகவும், பக்குவப்பட்ட பெண்ணாகவும் இருக்க விரும்புகிறேன்.
உங்கள் லட்சியம் என்ன?
நடிப்புத் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும். முக்கியமாக நீலாம்பரி, சந்திரமுகி போன்ற துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.
Related Tags :
Next Story