பெண்களுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும் - இயக்குநர் விஜயபத்மா


பெண்களுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும் - இயக்குநர் விஜயபத்மா
x
தினத்தந்தி 21 Feb 2022 5:30 AM GMT (Updated: 19 Feb 2022 12:07 PM GMT)

எனது திரைப்படம் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், சமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது உதித்ததுதான் ‘நர்த்தகி’யின் கதைக்களம். இதில் ‘திருநங்கைகளை அவர்களின் குடும்பத்தினர் நிராகரிக்காமல் ஆதரிக்க வேண்டும்’ என்பதைப் படத்தின் கருவாக வைத்து இயக்கி இருந்தோம்.

திருநங்கைகளைப் பற்றிய திரைப்படத்தை இயக்கி, அதன் மூலம் உலகின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்த விஜயபத்மா, தற்போது ஹாலிவுட்டில் சாதனை படைக்கத் தயாராகி வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து:

உங்களைப் பற்றி...
தஞ்சாவூர் தான் எனது பூர்வீகம். அப்பா கோவிந்தராஜன், கட்டிட காண்டிராக்டர். தஞ்சையில் உள்ள உலக தமிழ்ப் பல்கலைக்கழக கட்டிடத்தைக் கட்டியதில் அப்பாவின் பங்கும் உள்ளது. அம்மா கமலா, வியட்நாமைச் சேர்ந்தவர். தஞ்சையில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், எனக்கு திருமணம் நடந்தது. பின்பு சென்னைக்கு வந்தேன். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறேன். 

இயக்குநராகும் எண்ணம் எப்படி வந்தது?
மருத்துவமனையில் பணியாற்றும்போது, தனியார் ஊடகங்களின் தொடர்பு கிடைத்தது. அப்போது கேமரா, நிகழ்ச்சி இயக்கும் விதம் போன்றவற்றை பார்க்கும் வாய்ப்பு உண்டானது. இந்த நுணுக்கங்களைக் கவனிக்கத் தொடங்கியதன் மூலம் இயக்குநராகும் ஆர்வம் ஏற்பட்டது. இவ்வாறு ஆரம்பித்ததுதான், எனது கலைப் பயணம்.

கலைத்துறை பிரவேசம் பற்றிக் கூறுங்கள்...
இயக்குநராக வேண்டும் என்று எண்ணியபோது, முதலில் குறும்படங்கள் இயக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது, கிடைத்ததுதான் தனியார் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட குறும்பட வாய்ப்பு. இதில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் உள்ள சாதனைகள், சவால்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இயக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு, பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு குறும்படம் இயக்கினேன். அந்தப் படத்தை இயக்குநர் பாலுமகேந்திரா திரையிட்டார். அப்போது, அவர் என்னைப் பாராட்டியதுடன் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து, என் ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்தார். இதுதான் எனது திரைப் பிரவேசத்திற்கான அஸ்திவாரமாக அமைந்தது.



நீங்கள் இயக்கிய முதல் படத்தைப் பற்றிக் கூறுங்கள்?
எனது திரைப்படம் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், சமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது உதித்ததுதான் ‘நர்த்தகி’யின் கதைக்களம். இதில் ‘திருநங்கைகளை அவர்களின் குடும்பத்தினர் நிராகரிக்காமல் ஆதரிக்க வேண்டும்’ என்பதைப் படத்தின் கருவாக வைத்து இயக்கி இருந்தோம். அந்த உணர்வைச் சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக, திருநங்கை ஒருவரை நாயகியாக நடிக்க வைத்தேன். அந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பாலினம் பற்றிய படிப்பிற்கு இந்தப் படத்தை உதாரணமாக வைத்துள்ளனர்.  இதுவே, எங்களுக்கான முதல் அங்கீகாரம்.

எதிர்ப்புகளை எப்படிச் சமாளித்தீர்கள்?
படம் எடுக்கும்போது எந்தவித எதிர்ப்பும் எழவில்லை. அதனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், சென்சார் முதல் திரையிடுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அனைத்தையும் சமாளித்து வந்ததுதான், இதற்குக் கிடைத்த வெற்றி.

படத்திற்கு கிடைத்த பாராட்டுகள் பற்றிச் சொல்லுங்கள்?
நார்வே நாட்டில் சிறந்த படம், சிறந்த இயக்குநருக்கான விருது, சமூக சிந்தனை படத்திற்கான எக்ஸ்னோரா விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கலை, இலக்கிய பிரிவு சார்பில் மாநில விருது  உள்ளிட்ட 7 விருதுகள் கிடைத்தன. தேசிய விருதுகள் பட்டியலிலும் இடம் பெற்றது.

குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
இதுபோன்ற படம் இயக்க வேண்டும் என்றவுடன் எனது கணவரும், மகன்களும் என்னை ஊக்குவித்தனர். என்னுடைய இளைய மகன் பிரதீப்ராஜ், உதவி இயக்குநராக இருந்து, பட வேலைகளை கவனித்துக் கொண்டார். இதனால், எளிதாக சமாளிக்க முடிந்தது.

உங்கள் ஹாலிவுட் பிரவேசம் பற்றி?
முதல் படத்தைப் போன்றே, இரண்டாவது படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விவேகானந்தர் மீது இருந்த ஈடுபாட்டால், பலருக்குத் தெரியாத அவரின் மறுபக்கம் பற்றிக் கூற நினைத்து 2012 முதல் 2017 வரை ஆராய்ச்சி செய்தேன். படத்தில் சிகாகோவில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கப்போகிறேன். முழு திரைப்படத்தையும் ஹாலிவுட் படமாக இயக்க உள்ளதால், அங்கேயே குடியேறி தற்போது முதல் கட்ட பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதுவும் அனைவரது பாராட்டையும் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் வெளியானதும் விவேகானந்தர் புகழ் விரிவடையும்.

உங்கள் சமூக செயல்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?
மருத்துவமனையில் பணியாற்றியபோது, ரத்ததான முகாம்கள் நடத்தி பல வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தற்போது, மார்பகப் புற்றுநோய் பற்றியும், உடல் தானம் பற்றியும் பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு நூலகம் தேவை என்பதால், பழைய புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று வருகிறேன்.

உங்கள் தேவதை யார்?
எனக்கு சமூக உணர்வு ஏற்பட அடிப்படைக் காரணமே மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா தான். இளவரசியாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களிடமும் பாகுபாடின்றி பழகினார். பல சமூக சேவை செய்து, இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார். அவர், எனக்கு பிடித்த ரோல்மாடல். 

பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?
பெண்கள், தங்களைச் சிறு வட்டத்துக்குள் அடைத்துக் கொள்ளாமல், தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்பட்டால், தடுமாற்றம் இல்லாமல் இருக்கலாம். பெண்கள் எதிலும், சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். 

Next Story