ஆஸ்திரேலியா டெஸ்டில் சதம் விளாசி ஸ்மிரிதி மந்தனா சாதனை


ஆஸ்திரேலியா டெஸ்டில் சதம் விளாசி ஸ்மிரிதி மந்தனா சாதனை
x
தினத்தந்தி 1 Oct 2021 7:59 AM GMT (Updated: 1 Oct 2021 7:59 AM GMT)

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார்.

குயின்ஸ்லாந்து,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பிங்க் பந்து டெஸ்ட்) கராரா ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை(நேற்று) தொடங்கியது.

இதில் டாஸ்  வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங்,  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய  இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவருன் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். இந்த நிலையில் அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்த போது  ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஸ்மிரிதி மந்தனா 51 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இந்த அரைசதத்தின் மூலம், 2013-க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 39 அரை சதங்களில், குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. 

இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ரன்னில் இருந்த போது, மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதையடுத்து இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்திலும், தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஸ்மிரிதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 216 பந்துகளில், 22 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

25 வயதான ஸ்மிரிதி மந்தனா, இன்றைய ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமைகளையும் அவர் தனதாக்கியுள்ளார்.

Next Story
  • chat