கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் மனைவி கற்பழித்து கொலை 70 பவுன் நகை, பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் மனைவி கற்பழித்து கொலை 70 பவுன் நகை, பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 May 2017 4:45 AM IST (Updated: 12 May 2017 7:01 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே ராணுவவீரர் மனைவியை கற்பழித்து கொலை செய்து 70 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளை

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் அருகேயுள்ள ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 40), ராணுவ வீரர். இவருடைய மனைவி காந்தரூபி (38). இவர்களுக்கு சக்திவேல் (17) என்ற மகன் உள்ளார்.

கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சக்திவேல் பிளஸ்–2 படிக்கிறார். சங்கரன் தற்போது அசாமில் பணியாற்றி வருகிறார். காந்தரூபி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சக்திவேல் டியூசன் சென்றார்.

அதன்பின்னர் சிறிது நேரத்தில் காந்தரூபி கீழ்அரசம்பட்டு வாரசந்தைக்கு சென்றுள்ளார். அவர் காய்கறிகள் வாங்கிவிட்டு இரவு 7–30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வரும்வழியில் காந்தரூபியிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் பேசி உள்ளனர். சுமார் 8 மணியளவில் காந்தரூபி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் 9 மணியளவில் சக்திவேல் டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்தார்.

கொலை

வீட்டின் முன்பு உள்ள கட்டிலில் சக்திவேல் அமர்ந்து தாயை அழைத்துள்ளார். வெகுநேரமாக கூப்பிட்டும் தாய் வராததால் சக்திவேல் வீட்டின் உள்ளே சென்றார். அங்கு அறைகளில் பொருட்கள், பீரோவில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தாய் காந்தரூபியை தேடினார்.

அவர் சமையல் அறையில் ரத்தகாயங்களுடன் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைக்கண்ட சக்திவேல் கதறி அழுதார். பின்னர் அருகே வசிக்கும் பெரியப்பா குமார் வீட்டிற்கு சென்று தகவல் தெரிவித்தார்.

நகை–பணம் கொள்ளை

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரெஜினாபேகம், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேல் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், வீட்டில் காந்தரூபி தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து அவரை நிர்வாணப்படுத்தி கற்பழித்துள்ளனர். மேலும் காந்தரூபியின் தலையை சுவற்றில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் பீரோவில் இருந்து 70 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். காந்தரூபியை 3 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் கற்பழித்து கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

3 பேரிடம் விசாரணை

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் பெஸ்வி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் காந்தரூபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காந்தரூபி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதால் பணத்தகராறில் மர்மநபர்கள் அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்ணமங்கலம் அருகே ராணுவவீரர் மனைவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story