தி.மு.க.–காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை விதித்ததை கண்டித்து நடந்தது


தி.மு.க.–காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை விதித்ததை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 7 Jun 2017 2:15 AM IST (Updated: 7 Jun 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை கண்டித்து அனைத்து எதிர்கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை கண்டித்து அனைத்து எதிர்கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறைச்சிக்காக மாடு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

எம்.எல்.ஏ. பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும் போது, மத்திய பா.ஜனதா அரசு இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை விதித்து உள்ளது. இந்த உத்தரவு அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து உள்ளது. நாம் ஒற்றுமையோடு இருந்து போராட வேண்டும். தமிழர்கள் கலாசாரம், மதத்தை மதிப்பவர்கள். பா.ஜனதா அரசு மதவெறியை தூண்டுகிறது. தமிழர்கள் என்ற முறையில் இதனை எதிர்க்க வேண்டும். மாட்டு இறைச்சி உத்தரவுக்கு பல்வேறு மாநில முதல்–அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளங்கட்சி பிரச்சினையே தீர்க்க முடியாததாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. மேலும் மத்திய அரசு இறைச்சிக்காக மாடு விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்ப பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று கூறினார்.

யார்–யார்?

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இக்பால், ஆதித்தமிழர் கட்சி தென்மண்டல செயலாளர் மனோகர், மாவட்ட தலைவர் சண்முகவேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொறுப்பாளர் முஜிபுர்ரகுமான், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியாரடியான், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story