சுரண்டை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை: வக்கீல் உள்பட 3 பேர் கைது வடமாநில கொள்ளையர்களுடன் தொடர்பா? போலீசார் விசாரணை


சுரண்டை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை: வக்கீல் உள்பட 3 பேர் கைது வடமாநில கொள்ளையர்களுடன் தொடர்பா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Jun 2017 8:00 PM GMT (Updated: 9 Jun 2017 6:49 PM GMT)

சுரண்டை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை போனது தொடர்பாக வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரண்டை,

சுரண்டை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை போனது தொடர்பாக வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களுக்கு, வட மாநில கொள்ளையர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

கோவிலில் கொள்ளை

நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் (மே) 26–ந் தேதி, சிவன்– பார்வதி, வள்ளி– தெய்வானை, காரைக்கால் அம்மையார் உள்பட 8 சாமி சிலைகள் கொள்ளை போயின.

இது தொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

3 பேர் சிக்கினர்

இந்த நிலையில் சுரண்டை– ஆனைகுளம் ரோட்டில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளை திருப்பி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். உடனே போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த மாதவன் (வயத 32), மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த சந்திர பாலசிங் (26), கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. இதில் மாதவன் நெல்லை கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

திடுக்கிடும் தகவல்கள்

அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, இவர்கள் 3 பேரும் சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலில் கடந்த மாதம் 8 சாமி சிலைகளை திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மாதவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். கொள்ளை போன சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

கைதான 3 பேரிடமும் துருவி துருவி மேல் விசாரணை செய்ததில் சாமி சிலைகள் கொள்ளையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரும், நெல்லை பகுதியைச் சேர்ந்த 3 பேரும் என மேலும் 6 பேருக்கு தொடர்புடையதாக தெரிகிறது.

வெளி மாநிலங்களுக்கு கடத்தலா?

கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சாமி சிலைகளை கொள்ளையடித்து அதனை வட மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் சாமி சிலைகள் கொள்ளை போனது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

கைதான 3 பேரையும் இன்னும் ஒரு சில நாட்களில் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story