பாட்டவயல் சோதனைச்சாவடியில் போலீசாரை துரத்திய காட்டுயானைகளால் பரபரப்பு


பாட்டவயல் சோதனைச்சாவடியில் போலீசாரை துரத்திய காட்டுயானைகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 9:57 PM GMT (Updated: 13 Jun 2017 9:57 PM GMT)

பாட்டவயல் சோதனைச்சாவடியில் போலீசாரை துரத்திய காட்டுயானைகளால் பரபரப்பு மற்றொரு பகுதியில் வீட்டை இடித்து சேதப்படுத்தின

பந்தலூர்,

பாட்டவயல் சோதனைச்சாவடியில் நள்ளிரவு காட்டு யானை போலீசாரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்றொரு பகுதியில் வீட்டை இடித்து சேதப்படுத்தின.

காட்டு யானைகளால் அச்சம்

பந்தலூர் தாலுகாவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பிதிர்காடு, அய்யங்கொல்லி, சேரம்பாடி, உப்பட்டி, பாட்டவயல் உள்ளிட்ட பகுதியில் காட்டு யானைகளால் மக்கள், விவசாயிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் முக்கிய சாலைகளில் நின்று கொண்டு காட்டு யானைகள் வாகனங்களை மறித்து இடையூறு செய்து வருகிறது. இந்த நிலையில் பாட்டவயல் சோதனைச்சாவடி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 5–க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக வந்தன.அப்போது சோதனைச்சாவடியில் பணியாற்றி கொண்டிருந்த 2 போலீசார் காட்டு யானைகளை கண்டு அச்சம் அடைந்தனர்.

ஓட்டம் பிடித்தனர்

இந்த சமயத்தில் ஒரு காட்டு யானை கண்ணிமைக்கும் நேரத்தில் சோதனைச்சாவடியை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. இதை கண்ட போலீசார் சோதனைச்சாவடியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை அந்த காட்டு யானை துரத்தி சென்றது. இதை அதே பகுதியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவானது. காட்டு யானையிடம் இருந்து தப்பிய போலீசார் சற்று தூரத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர். பின்னர் போலீசார் சோதனைச்சாவடிக்கு வந்து வழக்கம் போல் பணியை மேற்கொண்டனர். இருப்பினும் பீதியுடன் போலீசார் அமர்ந்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

வீட்டு கதவை உடைத்தன

இதுபோல் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே அம்பலமூலா கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 4 காட்டு யானைகள் நுழைந்தன. பின்னர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டன. அங்குள்ள விவசாயி சிவசங்கரன் என்பவரது வீட்டு கதவை காட்டு யானைகள் உடைத்தன.

பின்னர் சமையல் அறை சுவரை சேதப்படுத்திய யானைகள் அங்கு இருந்த அரிசி, சர்க்கரை, ரவை, மைதா உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. இதனிடையே தூங்கி கொண்டிருந்த சிவசங்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வர முயன்றனர். அப்போது காட்டு யானைகள் வீட்டை சுற்றி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வாழைகள் சேதம்

இதனால் பயத்தில் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று பதுங்கி இருந்தனர். மேலும் காட்டு யானைகளும் அங்கிருந்து தோட்டத்துக்குள் சென்றன. பின்னர் அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை தின்று சேதப்படுத்தியது. தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து கூச்சலிட்டு காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விடியற்காலை 5 மணிக்கு காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.


Next Story