சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்


சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:00 AM IST (Updated: 17 Jun 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலைய பயணிகள் ஓய்வு அறையில் தங்கி இருந்த கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

அந்தமானை சேர்ந்தவர் அனுஷ்கா (வயது 17, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தார்.

சென்னையில் இருந்து நேற்று பகல் அந்தமானுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்பதால், விமான நிலையத்தில் உள்ள இணைப்பு விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கான பயணிகள் ஓய்வு அறையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார்.

வாலிபர் சில்மி‌ஷம்

நேற்று அதிகாலை 6.30 மணியளவில் மாணவி, தனது அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென அறைக்குள் புகுந்து மாணவியின் கையை பிடித்து முத்தம் கொடுத்து அவரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து அறைகளில் தங்கி இருந்தவர்கள் ஓடி வந்து, சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் அவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹாரூன்ரசீத் (32) என்பது தெரியவந்தது. அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என திண்டுக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில் ஹாரூன்ரசீத், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், இதனால் வீட்டை விட்டு ஓடி வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி திண்டுக்கலில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டு உள்ளது. மேலும் அவரிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் தகராறு

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு உள்நாட்டு முனையத்துக்கு வந்த ஹாரூன்ரசீத், நான் சவுதி அரேபியாவுக்கு செல்கிறேன் என கூறினார். இதனால் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படையினர் அங்கிருந்து விரட்டி உள்ளனர்.

பின்னர் விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்று சாப்பாடு கேட்டு தகராறு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகே அவர், பயணிகள் ஓய்வு அறைக்கு சென்று மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.

பயணிகள் ஓய்வு அறை பகுதிக்கு யாரும் எளிதாக செல்லமுடியாது. மத்திய தொழிற்படையினர், விமான நிலைய ஆணையக ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். தீவிர விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் நேற்று அதிகாலை பணியின் போது, யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபர் உள்ளே சென்று இருப்பதாக தெரியவந்தது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story