இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 38 பேர் கைது


இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 38 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-17T01:49:01+05:30)

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து கோவை, ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 38 பேர் கைது

கோவை,

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் சாலை மறியல்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்கம் பகுதியில் ஆதித் தமிழர் பேரவையினர், மாவட்ட செயலாளர் நா.முருகன் தலைமையில் திரண்டனர்.

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த பேரவையை சேர்ந்த 2 பேர் கையில் மாட்டு தலையுடன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் இருந்து மாட்டுத்தலைகளை பறித்தனர்.

இந்த களேபரத்தால் அந்த இடமே பரபரப்பானது. இதையடுத்து மாநிலக்குழு உறுப்பினர் கோபால், மாவட்ட அமைப்பாளர் தாமரைவீரன் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலும்...

இதுபோன்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆதித்தமிழர் பேரவையின் கீழ் உள்ள மதுரைவீரன் மக்கள் பண்பாட்டு பேரவை சார்பில் மாட்டை வெட்டி மதுரைவீரன் சாமிக்கு படையல் போடும் பேராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதித்தமிழர் பேரவையினர், ‘சாப்பிடுவோம், சாப்பிடுவோம் மாட்டு இறைச்சியை சாப்பிடுவோம்‘ என்று மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் மாட்டு இறைச்சியை மதுரைவீரனுக்கு படையல் போடுவதற்காக ஈ.வி.என். ரோட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட மொத்தம் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story