இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூகசேவகி செல்வகோமதி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை களிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் (மே) 30–ந்தேதி உத்தரவிட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மத்திய அரசு வக்கீலாக ஆஜராகி வந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் தற்போது நீதிபதியாக, இந்த அமர்வில் (டிவிஷன் பெஞ்ச்) உள்ளார். எனவே இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டார்.