ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பது போல் பொதுமக்கள் நூதன போராட்டம்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 87–வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து தமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கு தடைவிதித்ததுபோல், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை மாட்டியிருந்த பெண்ணிடம் பொதுமக்கள் மனு கொடுப்பது போல் நடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு குழுவின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி போராட்டக்குழுவினர் கிராமம், கிராமமாக சென்று நடைபெற உள்ள தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று கீரமங்கலம், நகரம் மற்றும் பல கிராமங்களுக்கு சென்று வருகிற 15–ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நெடுவாசல் போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். அப்போது ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் வாகனங்களில் விவசாயிகள் புதுக்கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருவதாக கூறியுள்ளனர்.