மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கும் காலவரையறையை குறைக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கும் காலவரையறையை குறைக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை ஐகோர்ட்டில் அன்குர் பாட்டீல் என்ற சமூக ஆர்வலர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.அதில், ‘‘அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், மாநில அரசிடன் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன் மீது முடிவு எடுக்க 9 மாதங்கள் வரை மாநில அரசுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கால அளவை குறைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு கூடுதல் வக்கீல் பிரஜக்தா ஷிண்டே வாதிடுகையில், ‘‘அரசு வெளியிட்ட 1996–ம் ஆண்டின் அறிவிக்கைப்படி, அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரும் மனுவின் மீது 6 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். இந்த கால அவகாசத்தை மேலும் 3 மாதத்துக்கு நீட்டித்து கொள்ளலாம்’’ என்று குறிப்பிட்டார். இதனை பரிசீலித்த நீதிபதிகள் கூறியதாவது:–கேலிக்கூத்துமாநில அரசு அதன் கொள்கையை மறுஆய்வு செய்ய காலம் வந்துவிட்டது. இப்போதைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, விண்ணப்பித்திருந்த அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்று இருப்பார்கள். ஆகையால், இதுபோன்ற தீர்மானங்கள் மீது முடிவு எடுக்க குறுகிய கால வரையறையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இல்லை என்றால், இவை எல்லாம் கேலிக்கூத்து ஆகிவிடும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இதற்கு உள்துறையை சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரி 3 வாரத்துக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.