சொத்து தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


சொத்து தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 July 2017 4:15 AM IST (Updated: 15 July 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்டர்(வயது 39). அ.தி.மு.க. பிரமுகரான இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை விக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அவரை தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து விக்டரின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதற்கிடையே சொத்து பிரச்சினை காரணமாக விக்டர் அடித்து கொலை செய்யப்பட்டதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இது பற்றி அறிந்த அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் அங்கு சென்று விக்டரின் உடலை பார்வையிட்டார். அப்போது அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதியில் காயங்கள் இருந்தன. உடனே அவர் இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று விக்டரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சொத்து பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக விக்டருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விக்டரின் மனைவி நதியா, மாமனார் ஜவகர், மாமியார் சைதன்யா, மைத்துனர் சூசை ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முதல் கட்டமாக இதுகுறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவரது சாவுக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story