ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த வங்கி ஊழியர் கொலையா?
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டபாணி (வயது 59) என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 59) என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். வேலை முடிவதற்கு தாமதம் ஏற்பட்டால் வீட்டிற்கு செல்லாமல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கி கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள திண்ணையில் படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் மீண்டும் வங்கியின் பின்புறம் உள்ள திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தண்டபாணி ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இறந்த தண்டபாணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரம்பட்டி போலீசார் தண்டபாணி குடிபோதையில் இருந்ததால் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தாரா? அல்லது அவரை யாராவது தாக்கி கொலை செய்தார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.