அம்பத்தூரில் வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது


அம்பத்தூரில் வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 1:30 AM GMT (Updated: 2017-07-26T04:23:07+05:30)

அம்பத்தூர் பகுதியில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், பணம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி,

சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து போலீஸ் துணை கமி‌ஷனர் சர்வேஸ்ராஜ் உத்தரவின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

அம்பத்தூர் எஸ்டேட்டை அடுத்த வாவின் சந்திப்பில் நேற்று காலை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி விசாரணை செய்தனர். அவர்கள், போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பிரேம்குமார் (வயது 23), புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்த சங்கர் (19) என்று தெரிந்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர் எஸ்டேட் ரெயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் சந்தேகப்படும்படி நின்றுக்கொண்டிருந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை எச்.என்.என். நகரை சேர்ந்த கலையரசன் (20) என்றும் மற்றொருவர் 17 வயது சிறுவன் என்றும் தெரிந்தது. இவர்கள் ஆங்காங்கே பிரிந்து சென்று பெண்களிடம் செயின் பறிப்பதும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

கடந்த 20–ந் தேதி அம்பத்தூர் எஸ்டேட் அருகே பைபாஸ் சாலையில் லாரியை நிறுத்திஇருந்த சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பழனிவேல் (48) என்பவரை மிரட்டி ரூ.20 ஆயிரம், செல்போன், லாரி ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 21–ந் தேதி பிரேமலதா (42) என்பவரிடமும், 18–ந்தேதி கோமதி (39) என்பவரிடமும் செயின் பறித்துள்ளனர்.

4 பேர் மீதும் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவன் தவிர மற்ற 3 பேரையும் புழல் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story