பா.ம.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது


பா.ம.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-27T02:00:12+05:30)

அம்மாபேட்டை அருகே பா.ம.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள தொப்பபாளையத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 57). இவர் பா.ம.க. வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக உள்ளார். அம்மாபேட்டை அருகே உள்ள பி.கே.புதூாரை சேர்ந்தவர் சேட் என்கிற விவேகானந்தன் (48). அய்யாதுரைக்கும், விவேகானந்தனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அய்யாதுரை தொப்பபாளையத்தில் இருந்து அம்மாபேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாணத்திக்கல் மேடு என்ற பகுதியில் சென்றபோது எதிரே விவேகானந்தன் காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் மோட்டார்சைக்கிள் முன்பு காரை குறுக்காக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அவருக்கு பின்னால் மற்றொரு காரில் இருந்த 2 பேரும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அய்யாதுரையிடம் விவேகானந்தன், ‘என் மனைவி என்னை விட்டு பிரிந்து வாழ நீ தான் காரணம். இனிமேல் என் மனைவியுடன் பேசினால் உன்னை கொன்றுவிடுவேன்’ என்று கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் 3 பேரும் அங்கிருந்து கார்களில் சென்று விட்டனர்.

இதுகுறித்து அய்யாதுரை அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யாதுரைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விவேகானந்தன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராஜு (39), நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பழனிவேலு (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story