உப்பள்ளியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது


உப்பள்ளியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 July 2017 10:02 PM GMT (Updated: 2017-07-27T03:32:09+05:30)

உப்பள்ளியில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி,

உப்பள்ளியில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

உப்பள்ளி டவுன் கோகுல்ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து நகைகள், பணம், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை மர்மநபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். இதுதொடர்பாக கோகுல்ரோடு போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணமாக இருந்தன. இந்த திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோகுல்ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் கையசைத்தனர்.

போலீசார் நிற்பதை பார்த்தவுடன் காரில் வந்தவர்கள், போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்பு காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட போலீசார் காரில் இருந்து இறங்கி ஓட முயன்ற 6 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் விஜயாப்புரா டவுனை சேர்ந்த சையத் அலியாஸ்(வயது 26), ஆசிப்உசேன் பாஷா(22), சிக்கந்தர் பதான்(24), ஈரண்ணா(22), வீரப்பா சுரேஷ் கட்டிமணி(24), சுரேஷ்(22) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 6 பேரும் சேர்ந்து, கோகுல்ரோடு பகுதியில் இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை தொடர்ந்து திருடியது தெரியவந்தது. மேலும் இவர்கள் தற்போது ஓட்டி வந்த திருடிய கார் என்பதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கோகுல்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story