விசைத்தறி உரிமையாளர், மனைவி கொலையில் தொழிலாளி கைது


விசைத்தறி உரிமையாளர், மனைவி கொலையில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 1 Aug 2017 4:00 AM IST (Updated: 1 Aug 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

விசைத்தறி உரிமையாளர், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதை கொள்ளை சம்பவம் போல் நாடகமாடியது அம்பலமானது.

கருமத்தம்பட்டி,

கோவையை அடுத்த சோமனூர் வாய்க்கால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 63). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி சுந்தராம்பாள் (58). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் குமாரசாமியும், சுந்தராம்மாளும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனியாக விசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குமாரசாமி மற்றும் அவரது மனைவி சுந்தராம்பாள் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தனிப்படை அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இருவரையும் கொலை செய்தது, குமாரசாமியின் விசைத்தறி கூடத்தில் வேலைபார்த்து வந்த ஈரோடு மாவட்டம் லங்காபுரத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் பெருமாள் (43) என்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் ஈரோடு விரைந்து சென்று பெருமாளை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமாரசாமி மற்றும் அவரது மனைவி சுந்தராம்பாள் ஆகியோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பெருமாள் கடந்த வாரம் குமாரசாமியின் விசைத்தறி கூடத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவ்வப்போது குமாரசாமி, சுந்தராம்பாள் இருவரும் பெருமாளை வேலை வி‌ஷயமாக திட்டுவதாக கூறப்படுகிறது. கடந்த 28–ந்தேதி வேலையை முடித்துவிட்டு சம்பள பணத்தை கேட்டுள்ளார். இதில் குமாரசாமி அன்று இரவு வேலை செய்தால் தான் சம்பளம் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெருமாள், குமாரசாமி மற்றும் சுந்தராம்பாள் ஆகிய இருவரையும் தீர்த்து கட்ட முடிவுசெய்தார்.

பின்னர் அதிகாலை 3 மணியளவில், விசைத்தறி வேலைக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பியை எடுத்து வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குமாரசாமியின் தலையில் அடித்தார். வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சுந்தராம்பாளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் போலீசில் சிக்காமல் தப்பிப்பதற்காக கொள்ளைக்காக இந்த கொலை சம்பவம் நடந்தது போல் சுந்தராம்மாள் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். இதில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சிக்கிக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட பெருமாளை இன்று (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story