மந்திரி வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு மங்களூருவில் வருமானவரித் துறை அலுவலகம் சூறை


மந்திரி வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு மங்களூருவில் வருமானவரித் துறை அலுவலகம் சூறை
x
தினத்தந்தி 3 Aug 2017 3:00 AM IST (Updated: 3 Aug 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

மங்களூரு,

மந்திரி வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது அங்குள்ள வருமானவரித் துறை அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு

கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மந்திரி சபையில் மின்வாரியத் துறை மந்திரியாக இருக்கும் டி.கே.சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 64 இடங்களில் நேற்று ஒரே நாளில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ரூ.11 கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருமானவரி சோதனையை மத்திய பா.ஜனதா அரசு அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தியதாக கூறியும், பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்தும் நேற்று பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் இளைஞர் காங்கிரசார், காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.

மங்களூருவில் போராட்டம்

அதே போல் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனையை கண்டித்து தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் அட்டவார் பகுதியில் உள்ள மண்டல வருமானவரித் துறை அலுவலகம் முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள், மத்திய அரசு, வருமானவரித் துறையினர், பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் அட்டாவர்– ஹம்பன்கட்டா மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் நடுரோட்டில் டயர்களை போட்டு தீவைத்து கொளுத்தினர்.

அலுவலகம் சூறை– பரபரப்பு

அந்த சமயத்தில் போராட்டக்காரர்களில் சிலர் வருமானவரித் துறை அலுவலகத்தின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக ஜன்னல், கதவுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் சிலர் வருமானவரித் துறை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதனால் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் அறிந்ததும் பாண்டேஸ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அட்டவாரில் உள்ள மண்டல வருமானவரித் துறை அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story