58 கிராம கால்வாய் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
58 கிராம கால்வாய் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த ராஜசெல்வன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
உசிலம்பட்டி தாலுகாவை சுற்றியுள்ள 58 கிராமங்களுக்கு நீர்பாசன வசதிக்காக கடந்த 1996–1997–ம் நிதி ஆண்டில் தமிழக அரசு 58 கிராம கால்வாய் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில் 230 தூண்கள், ஒரு ரெயில்வே பாலம் அமைத்து அவற்றின் மேல் தொட்டிப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த தொட்டிப்பாலத்தின் வழியாக 58 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி வழங்கப்பட வேண்டும். இந்ததிட்டத்தால் 29 கால்வாய்கள், 3 குளங்கள் மூலம் 700 எக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். 3 புதிய கால்வாய்கள் மூலம் 227 எக்டர் தரிசு நிலம் பாசன வசதி பெறும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற 14 டெண்டர்கள் விடப்பட்டன. இதில் 12 பணிக்கான டெண்டர் ஏற்கப்பட்டது. 9 பணிகள் பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ளன. தொட்டிப்பாலம், ரெயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இத்திட்டம் தாமதம் அடைந்து வருகிறது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.75 கோடி ஆகும். 58 கிராம கால்வாய் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த திட்டப்பணிகள் குறித்து மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர் ஆய்வு செய்து வருகிற 30–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.