தேனியில் கிணற்றில் பிணமாக மிதந்த தாய்–மகள் கொலையா? போலீஸ் விசாரணை
தேனியில் கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண்ணும், அவருடைய 4 வயது மகளும் கிணற்றில் பிணமாக மிதந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
தேனி மாவட்டம், தேவாரம் கிருஷ்ணன்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 37). இவருடைய மனைவி சரஸ்வதி (32). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கர்ஷிதா (4) என்ற மகளும், 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.
ஆண் குழந்தை பிறந்ததில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சரஸ்வதி, தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள தனது தந்தை லட்சுமணன் (66) வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதி தனது மகள் கர்ஷிதாவுடன் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இரவு வரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
அவர்களை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேனி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசாரும் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் தேனி காட்டு பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் ஒரு சிறுமியும், பெண்ணும் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணங்களை பார்வையிட்டனர். தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டது. அப்போது, அவர்கள் மாயமான சரஸ்வதி, அவருடைய மகள் கர்ஷிதா என்பது தெரியவந்தது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் போலீசார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சரஸ்வதியின் செருப்பு, செல்போன் தரையில் கிடந்தது. அதன் அருகில் கோவிலில் பிரசாதமாக கொடுத்த விபூதி, பூக்கள் ஆகியவை இருந்தது. இதனால், அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்து இருப்பதாக தெரியவந்தது.
பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.