‘மக்களை பற்றி கவலைப்படவில்லை’ ஆட்சி, பதவியை காப்பாற்றுவதிலேயே அ.தி.மு.க. அரசு குறியாக உள்ளது
‘மக்களை பற்றி கவலைப்படவில்லை’ ஆட்சி, பதவியை காப்பாற்றுவதிலேயே அ.தி.மு.க. அரசு குறியாக உள்ளது என திருப்பரங்குன்றத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராணி முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் சுகந்தி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சமூகத்தில் ‘சரிபாதி வேண்டும் சமநீதி‘ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
கருத்தரங்கின் தலைப்பில் ‘வேண்டும் சமநீதி‘ என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் சமநீதி வேண்டும் என்று யாரிடம் கேட்பது, யாரிடமும் கேட்டு பெற முடியாது. நாமே எடுத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் உள்ளோம்.
பெண் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆகவே பல்வேறு துறையில் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்று சொல்கிறோம். கடந்த 2005–ம் ஆண்டின் ஆய்வின்படி 37 சதவீதம் பேர் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 27 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள். வேலைக்கு செல்லும் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்து விட்டது. இதற்கு காரணம் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இல்லை. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் மசோதா நிறைவேற்றப்படுவதில்லை.
பெண்கள் படித்து பட்டம் பெற்ற போதிலும் வீட்டில் முடங்ககூடிய அடிமைத்தனம் தான் இருந்து வருகிறது. குறிப்பாக திருமண வயதில் கூட ஏற்றம், இறக்கம் இருக்கிறது. அதாவது பெண்ணுக்கு 18 வயது என்றும், ஆணுக்கு 21 வயது என்றும் சட்டத்தில் உள்ளது.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தங்களது பதவியையும், ஆட்சியையும் காப்பாற்றி கொள்வதிலேயே குறியாக உள்ளனர். அவர்கள் மக்களை பற்றி கவலைப்படவில்லை. டெல்லியில் விவசாயிகள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதை கேட்பார் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, அகில இந்திய மாதர் சங்கத்தை சேர்ந்த வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.