300 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


300 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 26 Aug 2017 9:50 PM GMT (Updated: 2017-08-27T03:19:56+05:30)

300 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத். ஆட்டோ டிரைவர். கடந்த 2013–ம் ஆண்டு மே மாதம் மரோல் பகுதியில் ஹரிநாத் யாதவ் சவாரிக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது ராமன் குமார் என்பவர் மைனர் வாலிபர் ஒருவருடன் ஆட்டோவில் சவாரிக்காக ஏறினார். ஆட்டோ சிறிது தூரம் சென்றநிலையில் ராமன்குமார் ஆட்டோ டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்தார். பின்னர் அவரிடம் உள்ள பணத்தை தரவில்லை என்றால் கத்தியால் அறுத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

ஆனால் ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுக்க மறுத்தார். மேலும் 2 பேர் மீது போலீசில் புகார் அளிப்பேன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராமன்குமார் மைனர் வாலிபருடன் சேர்ந்து ஆட்டோ டிரைவரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் 2 பேரும் ஆட்டோ டிரைவர் பையில் இருந்த 300 ரூபாயை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் ராமன்குமார் மற்றும் மைனர் வாலிபரை கைது செய்தனர். இதில் ராமன்குமார் மீதான வழக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி 24–ந் தேதி தீர்ப்பு கூறினார். அதில் ராமன்குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மைனர் வாலிபர் மீதான விசாரணை சிரார் கோர்ட்டில் நடந்து வருகிறது.

Next Story