3 மாதங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவருக்கு ஜாமீன்
கோடநாடு காவலாளி கொலை–கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதம் செய்து வருகிறார்கள்.
கோத்தகிரி,
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 24–ந்தேதி 11 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. அந்த கும்பல் அங்கு பணியில் இருந்த எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொன்று விட்டு மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கி விட்டு எஸ்டேட்டுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் சேலம் அருகே உள்ள ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். 2–வது குற்றவாளியான கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கு காரில் செல்லும் போது வாகன விபத்தில் படுகாயமடைந்தார். அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சயான் பூரண குணம் அடைந்த பிறகு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வாளையார் மனோஜ்சாமியார், உதயகுமார், தினேசன், குட்டி பிஜின், சந்தோஷ் சாமி, வயநாடு மனேஜ் சாமி, திபு உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு உடைய ஜஷ்மீர் அலி, ஜித்தின் ராய் ஆகியோரும் தங்கள் பெயரில் காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு மஞ்சேரி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாளையார் மனோஜ்சாமியார், திபு, தினேசன், உதயகுமார், மற்றும் குட்டி பிஜின் ஆகியோர் மீது கடந்த ஜூலை மாதம் 18–ந் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து சந்தோஷ்சாமி, வயநாடு மனோஜ்சாமி ஆகிய இருவரும் ஊட்டி கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.
இதில் சந்தோஷ்சாமிக்கு சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 7–ந் தேதி சந்தோஷ் சாமி இருநபர் உத்தரவாதம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு சான்று கோத்தகிரி கோர்ட்டில் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வயநாடு மனோஜ்சாமி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து மீண்டும் வயநாடு மனோஜ்சாமி, கேரள சிறையில் உள்ள ஜஷ்மீர் அலி, ஜித்தன் ராய் ஆகியோர் சார்பில் ஜாமீன் கேட்டு ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 9–ந் தேதி தனிநபர் ஜாமீன் மற்றும் சொத்து சான்று வழங்கி ஜாமீனில் விடுவிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இது குறித்து உத்தரவு தபால் இன்னும் கேரள சிறைக்கு சென்று சேராததால் அவர்கள் இருவரும் மஞ்சேரி சிறையில் உள்ளனர். எனினும் விரைவில் அவர்கள் இருவரும் கோத்தகிரி கோர்ட்டில் உத்தரவாதம் செலுத்திய பின் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கைதானவர்கள் 3 மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தும் கூட இன்னும் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த காரணத்தால் நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டு வயநாடு மனோஜ் சாமி தினமும் கோத்தகிரி அருகில் உள்ள சோலு£ர்மட்டம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்த சந்தோஷ் சாமி தனது நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என ஊட்டி கோர்ட்டில் மனு அளித்தார். இதை தொடர்ந்து ஊட்டி கோர்ட்டு வாரந்தோறும் திங்கட்கிழமை கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.