ஐகோர்ட்டு தடையை மீறி வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் பணிக்கு வரவில்லை
ஐகோர்ட்டு தடையை மீறி வேலைநிறுத்தம் நடைபெற்றதால் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 9 பேர் நேற்று பணிக்கு வரவில்லை.
திண்டுக்கல்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
ஆனால், நேற்று மாநிலம் முழுவதும் தடையை மீறி போராட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 380 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று இருந்தனர்.
அதேநேரம் ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்த நிலையில் நேற்றைய தினம் 5 ஆயிரத்து 9 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதன்மூலம் நேற்று முன்தினம் பங்கேற்றவர்களை விட 629 பேர் கூடுதலாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருவது தெரியவந்துள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் பல்வேறு இடங்களில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் திரும்பி சென்றனர். பெரும்பாலான பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி, திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு நகலை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.
மாநிலம் முழுவதும் நேற்று 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதேநேரம் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளுக்கும், அந்தந்த அரசு செயலர்கள் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் ஒவ்வொரு துறையிலும் வேலைக்கு வரும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வேலைக்கு வராதவர்கள் குறித்து தினமும் காலை 10.15 மணிக்குள் அறிக்கை அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளனர். அதன்படி அனைத்து அலுவலகங்களிலும் கடந்த 2 நாட்களாக வேலைக்கு வராதவர்கள், வேலைக்கு வந்தவர்களின் விவரங்கள் அரசு செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.